தேடுதல்

இளையோர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் வாழும் அனுபவங்களாக..

பெற்றுக்கொண்ட மகிழ்வான அனுபவத்திற்கு ஏற்ப மறைப்பணியாளர்களாக, நற்செய்தியை அறிவிப்பவர்களாக, சான்று பகரக்கூடிய வாழ்க்கை வாழ்பவர்களாக இருங்கள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழும் அனுபவங்களாக உலக இளையோர் தினக் கொண்டாட்ட அனுபவங்கள் இருக்க வேண்டும் என்றும், அதை குடும்பத்தில் நண்பர்களிடத்தில் என ஒருவர் மற்றவருடன் பகிரும்போதே, அது தொடர்ந்து உயிருடன் திகழும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் லிஸ்பனில் நடைபெற்ற உலக இளையோர் தினக் கொண்டாட்டம் முடிந்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின் அந்நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு காணொளிச்செய்தி ஒன்றின் வாயிலாக செப்டம்பர் 9 சனிக்கிழமையன்று இவ்வாறு தனது கருத்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

குழந்தைகளால் குடும்பம் உயிருடன் வாழ்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய தாய் தந்தையர்கள் நாளைய தாத்தா பாட்டிகள் என குடும்பம் தொடர்ந்து உயிர்த்துடிப்புடன் செயல்படுவது போல இளையோர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவங்கள் அனைத்தும் நினைவுச்சின்னங்களாக இல்லாது உயிர்த்துடிப்புடன் வாழ வேண்டும் என்றும் அதற்கு அவை அனைத்தும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இளையோர் தினக்கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை பள்ளி, பல்கலைக்கழகம், பணிபுரியும் இடம், வாழும் இடம் என எல்லா இடத்திலும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் பெற்றுக்கொண்ட மகிழ்வை பகிர அழைப்பு விடுத்துள்ளார்.

பெற்றுக்கொண்ட மகிழ்வான அனுபவத்திற்கு ஏற்ப மறைப்பணியாளர்களாக, நற்செய்தியை அறிவிப்பவர்களாக,  சான்று பகரக்கூடிய வாழ்க்கை வாழ்பவர்களாக இருங்கள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நீங்கள் கேட்ட அனைத்து விதமான சாட்சிய அனுபவங்களையும் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த காலத்தை நினைவுகூரும் புகைப்படங்களாக, படத்தொகுப்புக்களாக மூடிவைக்கப்படாமல் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகப் புலப்படும் வகையில், பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகளாக உயிர்த்துடிப்புடன் வாழ்பவைகளாக நமது அனுபவங்கள் இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2023, 12:49