மனிதஉடன்பிறந்த உணர்வுடன் வாழ அழைக்கப்படும் கிறிஸ்தவர்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்பிக்கையுள்ள மக்கள் அனைவரும் சகோதரர்களாகவும், உறவின் பாலம் கட்டுபவர்களாகவும் இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும், ஒரே கடவுளின் குழந்தைகளாகிய நம் அனைவரின் கடமை, மனித உடன்பிறந்த உணர்வுடன் வாழ்வதே என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரெஞ்சு எழுத்தாளர் எரிக்-இம்மானுவேல் ஷ்மித்தின் "எருசலேமின் சவால் - புனித பூமிக்கு ஒரு பயணம்" என்ற புத்தகத்திற்கு எழுதியுள்ள பின்னுரையில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று ஆபிரகாம் வழி வந்த மதங்களின் நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரத்துவத்தைத் தழுவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எழுத்தாளர் ஸ்மித்தின் புத்தகமானது, 2014 ஆம் ஆண்டு தான் மேற்கொண்ட புனித பூமி திருப்பயணம், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் மற்றும் அப்போதைய கான்ஸ்டான்டினோபிலின் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும்தந்தை Athenagoras இடையிலான சந்திப்பின் 50ஆவது ஆண்டு, உலகெங்கிலும் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் ஆகியோரை நினைவுக்குக் கொணர்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
எருசலேமின் சவால் என்ற பயணக்கட்டுரை நாம் அனைவரும் மனித சகோதரத்துவத்தின் சவாலை எதிர்கொள்ள அழைப்பு விடுக்கின்றது என்றும், இயேசுவின் ஆரம்பகால வாழ்க்கை, பணிகள் மற்றும் செயல்களை இப்புத்தகத்தில் ஆசிரியர் நினைவு கூர்வது, எல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்று மீண்டும் சிந்திக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேம் இன்று உலகிற்கு முன்வைக்கும் சவால் என்பது ஒவ்வொரு மனிதனும் தன் இதயத்தில், உடன்வாழும் ஒவ்வொருவரையும் ஒரு சகோதரனாக பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை எழுப்ப வேண்டும் என்பதே என்றும், இனி எதிரிகளாகவோ அல்லது போர் செய்பவர்களாகவோ இருக்க மாட்டோம் என்பதனை நமது செயல்களினால் கண்கூடாக வெளிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நல் உணர்வு மற்றும் விழிப்புணர்வு வழியாக மட்டுமே அழிவு மற்றும் வெறுப்பின் ஆயுதங்களை அமைதிப்படுத்தவும், உலகம் முழுவதும் அமைதியின் இனிமையான நறுமணத்தைப் பரப்பவும், சாத்தியமான எதிர்காலத்தை உருவாக்கவும் முடியும்" என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்