தேடுதல்

மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை 

திருத்தூதுப் பயண நிறைவில் அன்னை மரியாவிற்கு நன்றி

தனது 44 வது திருத்தூதுப் பயணமானது நல்ல முறையில் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்க உரோமில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மர்சேய்ல் உள்ளூர் நேரம் மாலை 7.28  மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 10.58 மணிக்கு மர்சேய்ல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏ 320 என்னும் இத்தாலிய விமானத்தில் 715 கிமீ தூரத்தை 1 மணி 9 நிமிடங்களில் கடந்து உரோம் உள்ளூர் நேரம் 8.37 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12.07 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தார்.   

தனது 44 வது திருத்தூதுப் பயணமானது நல்ல முறையில் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்க உரோமில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒவ்வொரு திருத்தூதுப் பயணம் தொடங்குவதற்கும் முன்பும் பின்னரும் அன்னை மரியாவின் பெருங்கோவில் சென்று செபிப்பதை வழக்கமாகக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மர்சேய்ல் திருத்தூதுப்பயணம் நல்ல முறையில் நடைபெற்றதற்காக அன்னைக்குத் தன் நன்றியினைத் தெரிவித்து தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார்.

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 23 சனிக்கிழமையுடன் நிறைவுற்ற திருத்தந்தையின் 44ஆவது மர்சேய்ல் திருத்தூதுப் பயணம் இத்துடன் நிறைவிற்கு வருகின்றது.

திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி

இன்று  செப்டம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் நாளை முன்னிட்டு ஹஸ்டாக் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் என்ற தலைப்பில் குறுஞ்செய்திகளைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். புலம்பெயர்வதற்கும் புலம்பெயராமல் இருப்பதற்கும் உரிமையுடைய பல சகோதர சகோதரிகள் துன்பத்தில் இருக்கின்றார்கள் என்றும் அவர்களது துன்பம் நிறைந்த வாழ்க்கைக் கதை நமது இதயங்களைத்தொட அனுமதிப்போம் அலட்சியம் என்னும் வேறுபட்டால் நம் இதயக் கதவுகளை மூடி பின்வாங்காதிருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நமது உடன் சகோதர சகோதரிகள் எதிர்பாராத நேரத்தில் வரும்போது அவர்களை வரவேற்பதில், பாதுகாப்பதில், ஊக்குவிப்பதில் மற்றும் ஒருங்கிணைப்பதில் உள்ள சிரமங்கள் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் என்றும், புலம்பெயர்ந்தோரின்  நலவாழ்வைப் பரமாரிப்பது மட்டுமன்று அவர்களின் மாண்பைப் பாதுகாப்பதே நமது முக்கிய  அளவுகோலாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2023, 10:18