தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

வெலொட்ரோம் விளையாட்டரங்கத்தில் திருப்பலி

ஏறக்குறைய 1 இலட்சம் நம்பிக்கையாளர்கள் பங்கேற்ற இத்திருப்பலி, மர்சேய்ல் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனுக்காக அன்னை மரியாவின் அருள் வேண்டி நிறைவேற்றப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மர்சேய்ல் உள்ளூர் நேரம் மாலை 15.45 மணிக்கு வெலோட்ரோம் விளையாட்டரங்கத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி உடைகளை அணிந்து திருப்பலிக்கு ஆயத்தமானார். பாதுகாவலியாம் அன்னை மரியாவிற்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியினை பிரெஞ்சு மொழியில் நிறைவேற்றினார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் இருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகமானது பிரெஞ்சு மொழியிலும், லூக்கா நற்செய்தியில் இருந்து எடுக்கப்பட்ட நற்செய்தி வாசகமானது பிரெஞ்சு மொழியிலும் வாசிக்கப்பட்டன. மகிழ்வோடும் உற்சாகத்தோடும் திருப்பலியில் பங்கேற்ற மர்சேய்ல் மக்களுக்கு திருப்பலி மறையுரையினை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தையின் மறையுரையினைத் தொடரந்து நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் இஸ்பானியம், அர்மீனியம், துருக்கியம், இத்தாலியம், அரபு, குரோவேசியம் ஆகிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

காணிக்கைப் பாடல்களுக்குப் பின் தொடர்ந்த திருப்பலியின் நற்கருணை வழிபாட்டுப் பகுதியை  மர்சேய்ல் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Jean-Marc Aveline அவர்கள், நிறைவேற்றினார். ஏறக்குறைய 1 இலட்சம் நம்பிக்கையாளர்கள் பங்கேற்ற இத்திருப்பலி மர்சேய்ல் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் நலனுக்காக அன்னை மரியாவின் அருள் வேண்டி நிறைவேற்றப்பட்டது. பக்தியுடனும் எண்ணற்ற எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்த மர்சேய்ல் மக்களுக்கு திருப்பலியின் முடிவில் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நன்றிப்பாடல்களுடன் திருப்பலி நிறைவு பெறும் வேளையில் மர்சேய்ல் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Jean-Marc Aveline அவர்கள், திருத்தந்தைக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்களும் தனது இந்த 44 ஆவது மர்சேய்ல் திருத்தூதுப் பயணம் நன்முறையில் நிறைவேற காரணமாக இருந்த அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2023, 10:07