தேடுதல்

மங்கோலியாவில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை

ஏறக்குறைய 2000 மக்கள் கூடியிருக்க மங்கோலிய திருத்தூதுப்பயணத்தின் முதல் திருப்பலியை அந்நாட்டு மக்களுக்காக ஆங்கில மொழியில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உள்ளூர் நேரம மாலை 3.35 மணிக்கு பனி மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறந்த வாகனத்தில் வலம் வந்த படியே மக்களை சந்தித்தார். அதன்பின் திருப்பலி உடைகளை அணிந்து பனி மாளிகை எனப்படும் விளையாட்டரங்கத்தின் உட்புறத்தில் திருப்பலியை நிறைவேற்றத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலான்பாதர் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு இந்திய இலங்கை நேரம் பகல் 1.30 மணிக்கு ஏறக்குறைய 2000 மக்கள்  கூடியிருக்க மங்கோலிய திருத்தூதுப்பயணத்தின் முதல் திருப்பலியை அந்நாட்டு மக்களுக்காக ஆங்கில மொழியில் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதல் வாசகமானது மங்கோலிய மொழியில் வாசிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து திருப்பாடலானது ஆங்கில மொழியிலும், நற்செய்தி வாசகம் மங்கோலிய மொழியிலும் வாசிக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து கூடியிருந்த மங்கோலிய மக்களுக்குத் தன் மறையுரையினை ஆற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் மறையுரையைத்தொடர்ந்து  நம்பிக்கையாளர்கள் மன்றாட்டானது மங்கோலியம், ஆங்கிலம், கொரியம், இரஷ்யம், சீனம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன.

எளிய மற்றும் மகிழ்வான உள்ளத்துடன் கூடிய மங்கோலிய மக்களுக்கான திருப்பலியில் அவர்களுக்காக செபித்து திருப்பலியின் முடிவில் தனது சிறப்பு ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பலியின் நிறைவில் மங்கோலிய அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜார்ஜோ மரேங்கோ அவர்கள், திருத்தந்தைக்கு தன் நன்றியினைத் தெரிவித்தார்.

கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப்பயணம் நன்முறையில் நடைபெற உதவிய அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்தார்.

மங்கோலிய மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி ஆசீர் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்க்ள், அங்கிருந்து புறப்பட்டு திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்து இரவு உணவிற்குப் பின் நித்திரைக்குச் சென்றார்.

செப்டம்பர் 3  ஞாயிற்றுக்கிழமை காலை பல்சமய மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் சமயத்தலைவர்களுடான சந்திப்பு, மாலையில் மங்கோலிய மக்களுக்கான திருப்பலி என தனது 43ஆவது திருத்தூதுப் பயணத்தின்  மூன்றாம் நாளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். நாளை அதாவது, செப்டம்பர் 4 திங்கள் கிழமை காலை மங்கோலியாவில் தொண்டுப்பணிகள் ஆற்றும் பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றி  தனது திருத்த்தூதுப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2023, 11:43