மங்கோலிய மக்களுக்கு உளமார்ந்த நன்றி
மெரினா ராஜ் - வத்திக்கான்
கருணை இல்லத்திலிருந்து இல்லத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு இந்திய இலங்கை நேரம் காலை 8.00மணிக்குக் கிளம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 47.3 கிமீ தூரத்தை ஒரு மணி நேரம் காரில் பயணித்து செங்கிஸ்கான் பன்னாட்டு விமான நிலையத்தினை வந்தந்தடைந்தார். அங்கு திருத்தந்தைக்கு மங்கோலிய அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகள் சிறப்பான முறையில் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மங்கோலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Batmunk Battsetseg அவர்கள் விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்றார். அரசுத்தலைவர், அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் காவல்படையினரின் அணிவகுப்புக்களுக்குப் பின் மங்கோலிய இளம்பெண் ஒருவர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மலர் கொத்து கொடுத்தார். அம்மலர்களை அன்னை மரியாவிற்கு தான் அளிப்பதாக உறுதியளித்த திருத்தந்தை விமானத்தில் ஏறுவதற்கு முன் மங்கோலியா அப்போஸ்தலிக்க நிர்வாகி கர்தினால் ஜோர்ஜோ மரேங்கோ அவர்களின் கரங்களைக் குலுக்கி நன்றி கூறி விடைபெற்றார். விமானத்தில் பயணிக்கத்தொடங்கும் முன் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் தனது சிறப்பு நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலான்பாதர் உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணிக்கு இந்திய இலங்கை நேரம் காலை 9.30 மணிக்கு உலான்பாதர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உரோம் நோக்கிய தனது பயணத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
A330 என்னும் இத்தாலிய விமானத்தில் 8,230 கிமீ தூரத்தை 11 மணி நேரம் 22 நிமிடங்கள் கடந்து உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.20 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.50 மணிக்கு உரோம் பியுமிச்சினோ பன்னாடு விமானநிலையம் வந்துசேர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்பயணத்தின் போது தான் கடக்க இருக்கும் நாடுகளான மங்கோலியா, சீனா, கஜகஸ்தான், அஜர்பைசான், ஜோர்ஜா, துருக்கி, புல்கரி, செர்பியா மோந்தே நேக்ரோ, போஸ்னியா எர்செகோவினா, குரோவேசியா, இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துத் தந்திச்செய்தியினையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அரசுத்தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திச்செய்தி
விமானம் புறப்பட்ட உடனேயே, மங்கோலியாவின் அரசுத்தலைவர் குரேல் சுக் உக்னாவுக்கு அனுப்பிய தந்தியில், மங்கோலிய அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் மங்கோலியாவில் தனக்கு அளித்த அருமையான வரவேற்பிற்காக மீண்டும் ஒருமுறை தனது நன்றியுணர்வை தெரிவிப்பதாகவும், நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் செழிப்புக்காகத் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறி அனைவருக்கும் ஆசீர் அளித்து வாழ்த்துத்தந்திச்செய்தியினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ, மத்தரெல்லா அவர்களுக்கு அனுப்பிய தந்திச்செய்தியில் நம்பிக்கையின் புனிதப் பயணமாக மங்கோலியாவிற்கு மேற்கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தில், தேர்ந்துகொள்ளப்பட்ட கடவுளின் சிறிய மந்தையை, கிறிஸ்தவ ஒன்றிப்பும் மற்றும் தூயஆவியின் பணிகள், இறைஇரக்கம் மற்றும் சான்று வாழ்வு ஆகியவற்றில் ஊக்கப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்பான இத்தாலிய மக்களுக்காக தனது செபத்தினையும் ஆசீரையும் அளிப்பதாக அத்தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்