தேடுதல்

Benedictine Oblates துறவு சபையின் மாநாட்டில் பங்குபெற்றோருடன் திருத்தந்தை Benedictine Oblates துறவு சபையின் மாநாட்டில் பங்குபெற்றோருடன் திருத்தந்தை  (ANSA)

அன்பின் மதுரத்தால் விரிவாக்கப்பட்ட இதயத்தைக் கொண்டிருங்கள்

சுய நலத்தாலும், பாராமுகங்களாலும் மூச்சுத் திணறிப்போய் நிற்கும் இன்றைய உலகிற்கு நன்மைத்தனத்தின் எடுத்துக்காட்டாக இருக்கும் பெனடிக்டைன் துறவிகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

 வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அன்பின் மதுரத்தால் விரிவாக்கப்பட்ட இதயத்தைக் கொண்டிருங்கள் என புனித பெனடிக்ட் அவர்கள், தன்னைப் பின்பற்றியவர்களை நோக்கி விடுத்த அழைப்பை, புனித பெனடிக்டின் தியாகிகள் என்ற துறவு சபையின் அங்கத்தினர்களுக்கு நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Benedictine Oblate, அதாவது பெனடிக்டன் தியாகிகள் என்ற துறவுசபையின் ஐந்தாவது உலக கருத்தரங்கில் பங்குபெற்ற அச்சபை துறவிகளை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விரிவுபடுத்தப்பட்ட மனதைக் குறித்து நிற்கும் பெனடிக்ட் துறவு சபைகளின் உணர்வுடன் ஊக்கம் பெற்ற மேற்கத்திய ஆன்மீகம் தொடர்ந்து அனைத்துக் கண்டங்களிலும் பரவியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

பெனடிக்டைன் துறவுமடம் ஆற்றியுள்ள மாபெரும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கு அவர்களின் விரிவுபடுத்தப்பட்ட இதயமே காரணம் என எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இதயத்தின் விரிவாக்கம் என்பது கடவுளைத் தேடுவதிலும், நற்செய்திக்கான ஆர்வத்திலும், இன்முக வரவேற்பிலும் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனை நாம் தேடுவது, முதன்மையாக, நாம் தினமும் வாசிக்கும் நற்செய்தியின் வழியாக இடம்பெறுகிறது என்ற திருத்தந்தை, அடுத்த படியாக அது நாம் படைப்பைக் குறித்துத் தியானித்தல், நம் தினசரி நிகழ்வுகள் தரும் சவால்களை எதிர்கொள்ளல், தினசரி பணி அனுபவங்களை செபமாகக் கொள்ளல்,  நாம் தினமும் வாழ்வில் சந்திக்கும் மக்களை உடன்பிறப்புகளாகக் காணல் போன்றவைகள் வழி இறைவனை நோக்கிய தேடல் இடம்பெறுகிறது என்றார்.

இரண்டாவது முக்கிய குணநலனாக நற்செய்தி மீதான ஆர்வத்தை குறிப்பிட்ட திருத்தந்தை, ஆர்வமுள்ள சான்றுவாழ்வு வழியாக நாம் மற்றவர் வாழ்விலும் நற்செய்தி ஒளிர்விட உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெனடிக்டைன் துறவிகளின் மூன்றாவது சிறப்பு குணநலனாக இன்முக வரவேற்றலை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் அந்நியனாக இருந்தேன் என்னை வரவேற்றீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை மனதில் கொண்டு, தன்னை நாடி வருவோரில் இயேசுவைக் கண்டு பணிபுரியும் பெனடிக்டைன் துறவிகளைப் பாராட்டினார்.

தங்கள் கதவைத் தட்டும் அனைவரையும் வரவேற்று, குறிப்பாக ஏழைகளை வரவேற்று, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதன் வழியாக, சுய நலத்தாலும், பாராமுகங்களாலும் மூச்சுத் திணறிப்போய் நிற்கும் இன்றைய உலகிற்கு நன்மைத்தனத்தின் எடுத்துக்காட்டாக இருக்கும் பெனடிக்டைன் துறவிகளின் இச்செயல் மிகவும் தேவையானது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2023, 12:38