தேடுதல்

உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் திருத்தந்தை  (VATICAN MEDIA Divisione Foto)

அதிகம் பேசப்படாமல் மறைசாட்சிய வாழ்வை வாழும் உக்ரைன்

உக்ரைன் மக்கள் மறைசாட்சிகள் போன்று துன்பத்திற்கு உள்ளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கின்ற செயல்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மோதல் மற்றும் போரினால் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், துன்பப்படுத்தப்படுபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை என்பது உலகை அழிக்க விரும்பும் சாத்தானின் செயல் என்றும், இவ்வாறாகத் துன்புறும் உக்ரைன் மக்கள், உலக மக்களால் அதிகம் பேசப்படாமல், மறைசாட்சிய வாழ்வினை வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 6 புதன் கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புதன் பொதுமறைக்கல்வி உரையினை ஆற்றுவதற்கு முன்பாக ஐரோப்பிய நாட்டில் உள்ள உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க ஆயர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடூரமான போர் சிறார்களின் புன்னகையைப் பறிக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

போரின் தீய விளைவுகளிலிருந்து நம்மைக் காக்கவும், மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போருக்குக் காரணமானவர்களின் மனமாற்றத்திற்காகவும் நாம் அதிகமாக செபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தில், கத்தோலிக்க ஆலயங்களில் நடத்தப்படும் செபமாலைகள் அனைத்தும் உலக அமைதிக்காக ஒப்புக்கொடுக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.       

அக்டோபர் மாதத்தின் ஜெபமாலை பக்தி முயற்சிகள், செபங்கள் அனைத்தும் அமைதி மற்றும் மோதலின் முடிவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்கள் மறைசாட்சிகள் போன்று துன்பத்திற்கு உள்ளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கின்ற செயல் எனவும் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி இரஷ்ய கத்தோலிக்க இளையோருடன் காணொளிக் கூட்டம் ஒன்றில் உக்ரைன் - இரஷ்யா போர் பற்றி உரையாடிய கருத்துக்கள், மங்கோலியாவிலிருந்து திரும்பும் போது விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் உரையாடிய கருத்துக்கள் ஆகியவற்றைக் குறித்து கிரேக்கக் கத்தோலிக்க ஆயர்களுடன் ஏறக்குறைய 2 மணி நேரம் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைப் போல நாமும் தைரியமாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றும், அவமானங்கள், துன்பங்கள் என்னும் சிலுவையில் அறையப்படுதலுக்குப் பலியாகாமல், உண்மைக்குச் சான்று பகர்பவர்களாக துன்புறும் மக்களுடன் உடன் இருப்பவர்களாக வாழ முற்பட வேண்டும் என்றும், இது கடினமான ஒன்று என்றாலும், இயேசு நமக்குக் காட்டிய கற்பித்த இப்பாதையில் பயணிப்பதையே மக்கள் விரும்புகின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2023, 09:37