தெற்கு ஆசியா முழுவதும் உறவுப்பாலம் கட்டியெழுப்புதல்: திருத்தந்தை
ஜான் போஸ்கோ – வத்திக்கான்
வருகின்ற செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி உரோம் நேரம் பிற்பகல் 3 மணிக்கு இந்திய இலங்கை நேரம் 11.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து இணைய வழியில் இந்தியா, பாகிஸ்தான், மற்றும் நேபால் நாடுகளின் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்ற உள்ளார்.
சிகாகோ லொயோலா பல்கலைக்கழகத்தின் மேய்ப்புப்பணிக்கல்வி மற்றும் உலகளாவிய சமூக ஈடுபாடு அலுவலக நிறுவனத்தின் முனைவர். பீட்டர் ஜோன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்க திருப்பீடத்துறையின் முனைவர். எமிலிச்சே கூடா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில் தெற்கு ஆசியாவைச் சார்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களான பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள லெயோலா ஆய்வரங்கம் மற்றும் ஆன்மிக மையம், இந்தியாவின் பெங்களுருவிலுள்ள கிறிஸ்து பல்கலைக்கழகம் மற்றும் புனித ஜோசப் பல்கலைக்கழகம், டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரி, சென்னை லெயோலா தன்னாட்சி கல்லூரி, நேபாள நாட்டின் காட்மாண்டுவில் உள்ள புனித சவேரியார் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒரு மாணவ பிரதிநிதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் ஸூம் இணைப்பின் வழியாக உரையாட உள்ளார். திருத்தந்தையுடனான இச்சந்திப்பு ஆங்கிலம், இஸ்பானியம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வலையொளிப்பதிவில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
“Building Bridges”
உறவுப்பாலம் கட்டியெழுப்பும் முயற்சி எனும் அமைப்பானது, திருத்தந்தையின் ஒன்றிணைந்த பயணத்திற்கான அழைப்பினால் உந்தப்பட்டு சிகாகோவின் லெயோலா பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்டது. இது மாணவர்களை மையப்படுத்தி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யும் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. இதன் தொடக்க நிகழ்வானது 2002 ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு தெற்கு உறவுப்பாலம் கட்டியெழுப்புதல் தொடர்பாக லொயோலா மற்றும் திருத்தந்தையின் இலத்தீன் தென் அமெரிக்க தலத்திருஅவையின் ஒத்துழைப்புடன் உருவாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இம்முயற்சியின் வாயிலாக பெரிய தெற்காசிய பகுதியின் எல்லை முழுவதும் உள்ள மாணவர்களின் குழுவை உருவாக்குதல், சமூக அக்கறைகளை பகிர்தல், செவிமடுத்தல், உரையாடல், தெளிந்து தேர்தலில் ஈடுபடும் மாணவர்களுடன் உடனிருத்தல், அதன் வழியாகக் கிடைக்கும் கருத்துக்களை அக்குழுக்களின் மாணவ பிரதிநிதிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் உரையாடல், திருத்தந்தையிடம் தங்களின் குழுக்களின் அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகளை பகிர்ந்து கொள்ளல் போன்றவற்றின் வழியாக செயல்பட இருக்கின்றது.
திருத்தந்தையுடனான அமெரிக்க மாணவர்களின் வரலாற்று சிறப்புமிக்க முதல் சந்திப்பு பிப்ரவரி 24, 2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரண்டாவது சந்திப்பு நவம்பர் 2022 அன்று ஆப்ரிக்கா முழுவதற்குமான உறவுப்பாலம் கட்டியெழுப்புதல் சந்திப்பு துணை சஹாரா ஆப்பிரிக்க மாணவர்களை உள்ளடக்கி நடைபெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்