தேடுதல்

போர்த்துக்கல் திருப்பீடத்தூதரகத்தில் திருத்தந்தை

போர்த்துக்கல் திருப்பீடத் தூதரகமானது தலைநகரின் மையத்தில் உள்ள அவெனிதாஸ் நோவாஸின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆகஸ்ட் 2 புதன்கிழமை காலை போர்த்துக்கல் நாட்டின் அரசுத்தலைவர் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியபின் திருப்பீடத்தூதரகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தூதரக அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

போர்த்துக்கல் திருப்பீடத்தூதரகம்

போர்த்துக்கல் திருப்பீடத் தூதரகமானது தலைநகரின் மையத்தில் உள்ள அவெனிதாஸ் நோவாஸின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தத்தின் வழி பாத்திமாவின் நோசா சென்ஹோரா மற்றும் பெட்ரீராவின் சாவோ செபாஸ்டியோ என்ற புறநகர் பகுதிகள் இதனோடு ஒன்றிணைக்கப்பட்டன. கடற்கரையிலிருந்து விலகி, நீண்ட, பரந்த வழிகளைச் சுற்றி, குடியிருப்பு மற்றும் வணிக மாவட்டங்களாக உருவாகியுள்ள இந்த நகர்ப்பகுதி முழுவதும், இன்று அவெனிடாஸ் நோவாஸ் என்று அழைக்கப்படுகிறது. வணிகம் மற்றும் வர்த்தகத்திற்கான முக்கிய பகுதிகளில் ஒன்றாகத் விளங்கும் இவ்விடம் புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களின் தயாரிப்புக்கள் விற்கப்படும் இடமாகவும் திகழ்கின்றது மேலும், பெரிய நிறுவனங்கள், தேசிய மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் உணவு மற்றும் தங்கும் விடுதிகளாலும் இப்பகுதி நிறைந்துள்ளது. லிஸ்பனின் இப்பகுதியில் பாரோக் கலைவடிவில் கட்டப்பட்ட பெட்ரீராவின் சாவோ செபாஸ்டியோ ஆலயம் உள்ளது. 1652ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம் 1755ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து தப்பிய ஒன்றாகும். மேலும், பன்னாட்டுக் கலையின் மிக முக்கியமான தனியார் சேகரிப்புகளில் ஒன்றான கலோஸ்டே குல்பென்கியன் அருங்காட்சியகமும் இங்கு உள்ளது. எகிப்து, கிரேக்கம், ஆசியா சார்ந்த கலைப்பொருட்களும் இரஷ்யாவின் ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்தில் உள்ள சில பொருட்களும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

திருப்பீடத்தூதரகத்தில் மதிய உணவுக்குபின் சற்று இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.00 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தலைவர் Augusto Ernesto dos Santos Silva என்பவரைச் சந்தித்தார்.    

திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை பிரான்சிஸ்

போர்த்துக்கலின் பாரளுமன்றத் தலைவர்

பாராளுமன்றத் தலைவர் திரு. அகஸ்டோ எர்னஸ்டோ டோஸ் சாண்டோஸ் சில்வா என்பவர் 1956ஆம் ஆண்டு போர்டோவில் பிறந்தவர். 1978 இல் போர்டோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டம் பெற்ற இவர் அதன்பின்னர் ISCTE எனப்படும் லிஸ்பன் பல்கலைக்கழக நிறுவனத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1981ஆம் ஆண்டில் போர்டோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக தனது கல்வி வாழ்க்கையைத் தொடங்கிய திரு அகுஸ்டோ அவர்கள், 1998 முதல் 1999 வரை அப்பல்கலைக்கழகத்தின் உயரதிகாரியாகப் பணியாற்றினார். 1990ஆம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்து பல அமைச்சர் பதவிகளைப் பொறுப்பேற்ற அவர், 2000 முதல் 2001ஆம் ஆண்டு வரை கல்வி அமைச்சராகவும்,  2001 முதல் 2002 வரை கலாச்சார அமைச்சராகவும், 2005 முதல் 2009 வரை   பாராளுமன்ற செயல்பாட்டு அமைச்சராகவும், 2009 முதல் 2011 வரை தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும்,  2015 முதல் 2022 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். 2022  மார்ச் 29 அன்று அவர் சட்டமன்ற குடியரசின் ஆளுநராகவும் போர்த்துகீசிய பாராளுமன்றத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 67 வயதான திரு.சந்தோஸ் சில்வா அவர்களுக்கு மூன்று பிள்ளைகளும், ஐந்து பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

போர்த்துக்கல் குடியரசின் பிரதமர் திரு. அன்டோனியோ கோஸ்டா
போர்த்துக்கல் குடியரசின் பிரதமர் திரு. அன்டோனியோ கோஸ்டா

போர்த்துக்கல் பிரதமர்

பாரளுமன்றத்தலைவருடனான சந்திப்பிற்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போர்த்துக்கல் குடியரசின் பிரதமர் திரு. அன்டோனியோ கோஸ்டா அவர்களைச் சந்தித்தார். 1961 இல் லிஸ்பனில் பிறந்த இவர் லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் லிஸ்பன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய ஆய்வுகளில் முதுகலைப் படிப்பையும் பயின்றார்.  தன் இளம் வயதிலேயே சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர்,  சில ஆண்டுகள் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுவிட்டு, 1988 ஆம் ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1991 மற்றும் 2004 க்கு இடையில், பாராளுமன்ற உறுப்பினராகவும், 1982 மற்றும் 1993 க்கு இடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, லிஸ்பன் சட்டமன்ற உறுப்பினராகவும், 1993 மற்றும் 1995க்கு இடையில் லூரெசின் கவுன்சிலராகவும் இருந்தார். 1995–1997இல் பாராளுமன்றச் செயல்பாடுகளுக்கான மாநில செயலாளர், 1997 முதல் 1999 வரை  பாராளுமன்ற அமைச்சர்,  1999 முதல் 2002 வரை நீதி அமைச்சர், 2004 முதல் 2005 வரை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் துணைத் தலைவர்,  2005 முதல் 2007 வரை உள்துறை அமைச்சர், 2007ம் முதல் 2015 வரை எட்டு ஆண்டுகள் லிஸ்பன் நகரின் மேயர் என பல பதவிகளை வகித்தார். 2014 இல் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர்,  2015, 2019 மற்றும் 2022 என மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவாவைச் சேர்ந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் நாட்டின் பாராளுமன்றத்தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரைத் திருப்பீடத்தில் தனித்தனியாகச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் பின், அருள்பணியாளர்களால் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 13 பேர் அடங்கிய குழுவை சந்தித்து அவர்களோடு உரையாடி ஆறுதல் கூறினார். பின்னர், போர் இடம்பெறும் உக்ரைனிலிருந்து வந்திருந்த 15 இளையோரை திருப்பீடத்தூதரகத்திலேயே சந்தித்து  சிறிது நேரம் உரையாடினார். இதையெல்லாம் முடித்து, லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம், இரவு 9.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்திலிருந்து கிளம்பி 9.9 கி.மீ. தூரம் காரில் பயணித்து பெலெமின் அன்னை மரியா பெயர் கொண்ட துறவு இல்லத்திற்குச் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2023, 11:21