தேடுதல்

தன்னார்வலர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலக இளையோர் தினக் கொண்டாட்ட சிறப்புத்திருப்பலியை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிற்பகலில் போர்த்துக்கல் திருப்பீடத்தூதரகத்தார்க்கும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தன் நன்றியினைத் தெரிவித்து மகிழ்ந்தார். அதன்பின் அங்கிருந்து 11கிமீ தூரம் காரில் பயணித்து Marítimo de Algés என்னுமிடத்திற்கு வந்தார்.

Marítimo de Algés

Passeio Marítimo de Algés என்பது, லிஸ்பனின் புறநகரில், பெலெம் மற்றும் ஓய்ராஸ்க்கு இடையே அல்ஜெஸ் கப்பல்துறைக்கு அருகில் உள்ள ஒரு நடைபாதைக்குரிய இடமாகும்.  கடற்துறைமுகம் மற்றும் நகரத்தின் தனித்துவமான காட்சிகளை இங்கிருந்து காணலாம். மேலும் லிஸ்பன் துறைமுகத்தின் கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்களுக்கு தாயகமாகவும், ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், விளையாட்டு ஆகியவற்றிற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகவும் இவ்விடம் திகழ்கின்றது. இசைக்கச்சேரிகள் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்படும் இடமாகவும் மக்களுக்கு இந்த இடம் பயன்படுத்தப்படுகின்றது.

லிஸ்பன் உள்ளூர் நேரம் மாலை 4மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு Marítimo de Algés இடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை லிஸ்பன் முதுபெரும்தந்தை வரவேற்றார். அதன்பின் திருத்தந்தை முதுபெரும்தந்தையுடன் திறந்த காரில் இளையோரிடையே வலம் வந்தார். 37ஆவது உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் போர்த்துக்கலின் லிஸ்பனில் மிகச்சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் திருத்தந்தை நன்றியைத்  தெரிவிக்கும்  கூட்டம் ஆரம்பமானது.        

கூட்டத்தின் துவக்கத்தில், உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் பற்றிய காணொளியானது ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தன்னார்வலர்களின் பிரதிநிதிகள் மூவர் தங்களது அனுபவத்தை திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக லிஸ்பன் முதுபெரும்தந்தை அவர்கள் திருத்தந்தைக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார். அதன்பின் திருத்தந்தை அவர்கள் தன்னார்வலர்களுக்கான தனது உரையை அதாவது போர்த்துக்கல் திருத்தூதுப் பயணத்தின் இறுதி உரையை ஆற்றத்தொடங்கினார். திருத்தந்தையின் உரைச்சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.

இவ்வாறு தன்னார்வலர்களின் மிகச்சிறப்பான செயல்களுக்குத் தன் நன்றியினையும் வாழ்த்தினையும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களை மிகச்சிறப்பாக நிறைவுசெய்த மகிழ்வில் தன்னார்வலர்களிடம், திருத்தூதுப் பயணத்தின் 5 நாள்கள் இளையோருடன் இருந்த மகிழ்வில் திருத்தந்தை நன்றி கூறி விடைபெற்றார். லிஸ்பன் உள்ளூர் நேரம், மாலை 5.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 17.3 கி.மீ. தூரம் காரில் பயணித்து Figo Maduro விமானத்தளத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2023, 12:09