தேடுதல்

மூவேளை செப உரையில் பங்கேற்ற மக்கள் மூவேளை செப உரையில் பங்கேற்ற மக்கள்  (ANSA)

இன்றைய உலகில் நடப்பது குறித்து நம் அக்கறை

திருத்தந்தை : உலகில் அமைதிக்காக, குறிப்பாக உக்ரனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக செபிக்க மறக்கவேண்டாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இன்றைய உலகில் மறக்கப்பட்டதாக இருக்கும் பெரும்போர்களும், இவ்வுலகை இரத்தக் கறைபிடிக்க வைக்கும் எண்ணற்ற மோதல்களும் முடிவுக்கு வரவேண்டும் என இறைவனை நோக்கி செபிப்போம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 2ஆம் தேதி வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கியபின் இந்த விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் அமைதிக்காக, குறிப்பாக உக்ரனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக செபிக்க மறக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகில் நடப்பது குறித்து நாம் அக்கறை எடுப்பதோடு, துயருறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்வோம், ஏனெனில், இவ்வுலகுக்கு பலமூட்டி, பாதுகாக்கும் சக்தி அது எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறக்கப்பட்ட போர்கள் என திருத்தந்தை குறிப்பிட்டதைக் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ள சமூகத்தொடர்பாளர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் மோதல்களால் ஏற்படுத்தியுள்ள மனித உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்புக்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.

ஆப்ரிக்கக் கண்டத்தில் இடம்பெறும் மோதல்கள் ஒரு நாட்டு எல்லையையும் தாண்டி பரவி வருவதையும், சூடான் மோதல்களால் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதையும், ஏறக்குறைய 25 இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டும் இவர்கள், கோங்கோவின் கிழக்குப் பகுதி, ஏமன், சிரியா, உக்ரைன் ஆகியவைகளில் மோதல்களால் மக்கள் அனுபவிக்கும் அவலங்களையும் எடுத்தியம்பியுள்ளனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2023, 13:57