தேடுதல்

உணவுப் பொருள் அங்காடியில் விற்பனையாளர் உணவுப் பொருள் அங்காடியில் விற்பனையாளர்   (ANSA)

உணவுக்கு வழி செய்வது என்பது மக்களின் மாண்பை வழங்குவதாகும்

ஆயுதம் தாங்கிய மோதல்களாலும், காலநிலை மாற்றங்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும் சத்துணவின்றி பல இலட்சக்கணக்கான மக்கள் துயரில் வாடுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சத்துணவுப் பற்றாக்குறையை வெற்றிகண்டு அனைத்து மனிதர்களுக்கும் மாண்பை வழங்கும் ஒன்றிணைந்த நடவடிக்கையை அனைத்து நாடுகளும் மேற்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.நா.வின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் 43வது கூட்டத்தொடருக்கு FAOவின் திருப்பீடப் பிரதிநிதி, பேரருள்திரு Fernando Chica Arellano அவர்கள் வழியாக திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், இன்றைய உலகில் ஆயுதம் தாங்கிய மோதல்களாலும், காலநிலை மாற்றங்களாலும், இயற்கைப் பேரிடர்களாலும் சத்துணவின்றி பல இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து துயர்களை அனுபவித்து வருவதை அகற்ற, நாடுகளிடையே ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.

ஏழ்மை, சரிநிகரற்றதன்மை, மற்றும் உணவு, குடிநீர், நலஆதரவு, கல்வி, உறைவிடத்திற்கு வழியின்மை என்பவை மனித மாண்புக்கு எதிராகச் செல்பவை எனவும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பதட்டநிலைகளால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியைக் கண்டுவருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் உணவுக்கு வழி செய்வது என்பது அவர்களுக்குரிய மாண்பை வழங்குவதாகும் எனக்கூறும் திருத்தந்தை, அரசுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி அமைப்புக்கள், அனைத்துலக நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள், தனியார்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

எவருக்கும் தினசரி உணவு கிட்டா நிலை உருவாகக்கூடாது என்பதில் திருப்பீடம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான முயற்சிகளை தொடர்ந்து ஆற்றிவருவதாகவும் 43வது கூட்டத்தொடரில் பேரருள்திரு Chica Arellano அவர்களால் வாசிக்கப்பட்ட தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2023, 14:06