தேடுதல்

முகமது அப்தெல்சலாம் மற்றும் மஜித் அல்-சுவைதியுடன் திருத்தந்தை முகமது அப்தெல்சலாம் மற்றும் மஜித் அல்-சுவைதியுடன் திருத்தந்தை  

COP28 உச்சி மாநாடு குறித்து திருத்தந்தையுடன் சந்திப்பு!

இந்தச் சந்திப்பின்போது, COP28 உச்சி மாநாட்டில் சமய மற்றும் கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல் அரங்கை உருவாக்கும் சாத்தியம் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முஸ்லிம் முதியோர் சபையின் பொதுச் செயலாளர் நீதிபதி முகமது அப்தெல்சலாம் மற்றும் COP 28-க்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமை இயக்குநரும் சிறப்புப் பிரதிநிதியுமான தூதர் மஜித் அல்-சுவைதி ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 29, திங்களன்று வத்திக்கானில் நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது 2023-இல் நிகழும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP28) குறித்த தயாரிப்புக்கள் மற்றும் மத நம்பிக்கை அடிப்படையிலான குழுக்களின் ஈடுபாடு குறித்தும் விவாதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் மத நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்களை ஈடுபடுத்துவதற்காக, காலநிலை மாற்றம் குறித்த கூட்டு முயற்சியைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள், மற்றும் COP28-இன் இலக்குகளை நிவர்த்தி செய்வதில் குடிமைச் சமூக அமைப்புகளின் பங்களிப்பு குறித்தும் இந்தச் சந்திப்பின்போது அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

வத்திக்கானில் விவாதிக்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, உலகெங்கிலும் உள்ள அனைத்து மத நிறுவனங்கள், தலைவர்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளுக்கு நமது பொதுவான இல்லமாகிய இந்தப்  பூமியைப் பாதுகாப்பதற்கான இலக்கை அடைய விடுக்கப்பட்ட ஒன்றுபட்ட அழைப்பாக அமைந்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்த, 28-வது உலக உச்சி மாநாடு, இவ்வாண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) துபாயில் நடைபெறும்.  "உலகளாவிய உணவு முறைகளைப் பாதுகாத்தல்" என்ற தலைப்பை இம்மாநாடு அதன் மையப்பொருளாகக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2023, 14:04