தேடுதல்

 Miguel Angel குடும்பத்தினர் அனுப்பிய வாழ்த்தட்டை Miguel Angel குடும்பத்தினர் அனுப்பிய வாழ்த்தட்டை  (ANSA)

மிகுவல் ஏஞ்சலின் தாயாரிடம் தொலைபேசியில் உரையாடிய திருத்தந்தை

மார்ச் 31 அன்று நுரையீரல் தொற்று சிகிச்சைக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பிறந்து சில வாரங்களே ஆகியிருந்த குழந்தை மிகுவேல் ஏஞ்சலுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜெமெல்லி மருத்துவமனையின் குழந்தை புற்றுநோயியல் பிரிவில் உள்ள மிகுவல் ஏஞ்சல் என்னும் குழந்தையின் தாயாரிடம் தொலைபேசியில் உரையாடி, விரைவில் குணம்பெற அவர் குடும்பத்தினர் அனுப்பிய வாழ்த்தட்டைக்கு தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 8, வியாழனன்று ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த மார்ச் மாதம் தான் திருமுழுக்கு அருளடையாளம் வழங்கிய குழந்தை மிகுவேல் ஏஞ்சலின் குடும்பத்தினர் அனுப்பிய வாழ்த்தட்டைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறிது நேரம் அக்குழந்தையின் தாயாருடன் தொலைபேசியில் உரையாடினார்.

மார்ச் 31 அன்று நுரையீரல் தொற்று சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெமெல்லி மருத்துவமனையின் புற்றுநோயியல் பிரிவில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதலான வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறந்து சில வாரங்களே ஆகியிருந்த குழந்தை மிகுவேல் ஏஞ்சலுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தையும் வழங்கினார்.

குழந்தையின் தாயான Marcela del Rosario Pariona Barcena பெரு நாட்டைச் சார்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக இத்தாலியில் குடும்பத்தோடு வசித்து வரும் அவர், திருத்தந்தை ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அறிந்து அவர் விரைவில் குணம்பெற ஆறுதல் வரிகள், புகைப்படங்கள் கொண்ட வாழ்த்தட்டை ஒன்றினைக் குடும்பத்தினரோடு இணைந்து உருவாக்கி அதனை திருத்தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தாழ்ச்சியான தனது குடும்பம் அதிக  நபர்களைக் கொண்டது என்றும், தங்கள் குடும்பத்தில் ஒருவராக திருத்தந்தையைக் கருதி தொலைபேசி உரையாடலின் போது தங்கள் இல்லத்திற்கு உணவருந்த ஒரு நாள் வரும்படி திருத்தந்தையைக் கேட்டுக்கொண்டதாகவும் மிகுவேல் ஏஞ்சலின் தாயார் பத்திரிக்கையாளர்களுக்குக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2023, 12:09