மக்களில் நம்பிக்கையை ஊட்ட ஒரு டிஜிட்டல் குறிப்பேடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலுள்ள Vandenberg தளத்திலிருந்து, திருத்தந்தையின் நம்பிக்கைச் செய்தியைத் தாங்கிய SPEI என்ற சிறு விண்கலம் தன் பயணத்தைத் துவக்கியுள்ளது.
“ஏன் அஞ்சுகிறாய், இன்னும் உனக்கு விசுவாசமில்லையா“ என்ற தலைப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த சிறிய டிஜிட்டல் குறிப்பேட்டில் திருத்தந்தை அவர்கள், கோவிட் தொற்றுநோய்க் காலத்தில் இவ்வுலகிற்கு வழங்கிய நம்பிக்கையின் வார்த்தைகள் சேமிக்கப்பட்டுள்ளன.
வரும் நாட்களில் இந்த டிஜிட்டல் குறிப்பேட்டை உலகின் வான்வெளி சுற்றுப்பாதையில் 525 கிலோமீட்டர் தூரத்தில் வைக்க உள்ளது இந்த சிறு விண்கலம்.
திருப்பீட்டத் தகவல்தொடர்புத் துறையுடன் இணைந்து தூரின் நகர் பல்கலைக்கழகத்தின் வழியாக இத்தாலிய விண்வெளி அமைப்பும் இந்த முயற்சியை மேற்கொண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியாவிலிருந்து அனுப்பியுள்ளன.
மக்களில் நம்பிக்கையையும் உடன்பிறந்த உணர்வு நிலையையும் தூண்ட உள்ள செய்திகளைத் தாங்கும் இந்த டிஜிட்டல் குறிப்பேடு, ஓர் அலைபரப்பியையும் ஒரு சேமிக்கும் நுண்சில்லையும் கொண்டுள்ளதுடன், பண்பலை வழியாக வானொலிகளுக்கு திருத்தந்தையின் சேமிக்கப்பட்ட கோவிட் தொற்று நோய் கால நம்பிக்கைச் செய்திகளையும் வழங்க உள்ளது.
ஏற்கனவே இவ்வாண்டு மார்ச் 29ஆம் தேதி புதன் பொதுமறைக்கல்வியுரையின்போது இந்த முயற்சியை திருத்தந்தை ஆசீர்வதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்