பெர்லுஸ்கோனியின் மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அவர்கள் மரணமடைந்ததையொட்டி திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் தந்திச் செய்தி ஒன்றை பெர்லுஸ்கோனியின் குடும்பத்திற்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர்.
அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்திற்கு தன் அருகாமையையும், அவர்களின் அந்த இழப்பின் துயரில் தன் பங்கேற்பையும் திருத்தந்தை வெளியிடுவதாகக் கூறும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் தந்திச் செய்தி, பெர்லுஸ்கோனி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருத்தந்தை செபிப்பதாகவும் உறுதி கூறுகிறது.
மேலும், முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனியின் மறைவையொட்டி இத்தாலிய ஆயர்களின் சார்பில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Matteo Zuppi அவர்கள், இத்தாலியின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார வாழ்வில் சிறப்புப் பங்காற்றியுள்ளதோடு, முப்பதாண்டுகள் அரசியல் வாழ்விலும் ஈடுபட்டு நான்குமுறை பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் செப உறுதியையும் தெரிவிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
1936ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இத்தாலியின் மிலான் நகரில் பிறந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, ஜூன் 12 இத்திங்களன்று மிலானின் புனித ரபேல் மருத்துவமனையில் காலமானார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்