தேடுதல்

(Green and Blue Festival) பச்சை மற்றும் நீலம் என்ற விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் (Green and Blue Festival) பச்சை மற்றும் நீலம் என்ற விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

இயற்கை, அடுத்திருப்பவர், வருங்காலத் தலைமுறை பற்றிய அக்கறை

இந்த 10 ஆண்டுகளில் நம் பொதுவான இல்லம் குறித்து நாம் செயல்படுத்தியுள்ள நல்திட்டங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நல்பயன்களைத் தந்துகொண்டிருக்கும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முதல் சுற்றுச்சூழல் கருத்தரங்கு இடம்பெற்று 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பல்வித புதிய தொழில்நுட்பங்களால் உலகின் ஒவ்வொருவரும் அடுத்திருப்பவர்களாக நெருங்கி வந்துள்ளார்களேயன்றி, இன்னும் உடன்பிறந்த உறவு நிலையில் ஒன்றித்து வரவில்லை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 5ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி -பச்சை மற்றும் நீலம் என்ற விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1972ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி Stockholmல் துவங்கிய மனித சுற்றுச்சூழல் கருத்தரங்கை நினைவுகூர்ந்ததோடு, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வும், அக்கறையும் அதிகரித்துவருவது குறித்து தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

இந்த 10 ஆண்டுகளில் நம் பொதுவான இல்லம் குறித்து நாம் செயல்படுத்தியுள்ள நல்திட்டங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு நல்பயன்களைத் தந்துகொண்டிருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளோம் என உரைத்த திருத்தந்தை, இக்காலக்கட்டத்தில் நம் இயற்கை, நமக்கு அடுத்திருப்பவர், வருங்காலத் தலைமுறையினர் ஆகியவை பற்றிய அக்கறை அதிகரித்துள்ளது என்பது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்
அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்

21ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே மனிதகுலம் தன் பொறுப்புணர்வுகளை தாராளமனதுடன் ஏற்று செயல்படுத்தி வருவது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இருப்பினும் தொடர்ந்து இடம்பெறும் காலநிலை மாற்றங்கள் நம் பொறுப்புணர்வுகளை நினைவூட்டிவருவதும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஏழைகளையும் வலுவற்றவர்களையும் பெரிய அளவில் பாதிக்கும் இந்த காலநிலை மாற்றங்கள், நீதி மற்றும் ஒருமைப்பாட்டுடன்கூடிய நம் செயல்பாடுகளுக்கு அழைப்புவிடுக்கின்றன எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட்-19 தொற்று நோயும் கால நிலை மாற்ற பாதிப்புகளும், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையும், இன்றைய மற்றும் நாளைய சமுதாயத்திற்காக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியவர்கள் நாம் என்பதையும் மீண்டும் நமக்கு நிணைவுபடுத்துகின்றன என உரைத்த திருத்தந்தை, இரண்டாம் உலகப் போருக்குப்பின் எவ்வாறு ஒருமைப்பாட்டுணர்வுடனும் தூர நோக்குடனும் செயல்பட்டோமோ அத்தகைய ஒரு மனநிலை ஏற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகின் நுகர்வுக் கலாச்சாரம், பாராமுகம், பொருட்களையும் மனிதர்களையும் வீணடித்தல் போன்ற மனப்போக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இடம்பெறவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இயற்கை குறித்தும் நமக்கு அடுத்திருப்பவர் குறித்தும் அக்கறையுடன் செயல்படவேண்டிய தேவையையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத் தலைமுறையின் நம்பிக்கைகளை நாம் திருடவேண்டாம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2023, 13:56