தேடுதல்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மருத்துவருடன் மத்தேயோ புரூனி செய்தியாளர்கள் சந்திப்பின்போது மருத்துவருடன் மத்தேயோ புரூனி   (ANSA)

திருத்தந்தையின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது

திருத்தந்தையின் உடல் நிலை காரணமாக ஜூன் 18ஆம் தேதி வரை திருத்தந்தையின் பொது நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மத்தேயோ புரூனி.

மெரினா ராஜ் – வத்திக்கான்

குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று மணி நேர அறுவைசிகிச்சை நல்லவிதமாக முடிந்து நலமாக இருப்பதாக தெரிவித்தார் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் Sergio Alfieri.

ஜூன் 7 புதன் கிழமை உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூன்று மணி நேர அறுவைசிகிச்சை நல்லபடியாக முடிந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவமனையின் 10ஆம் தளத்தில் உள்ள அறைக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவித்தார் திருப்பீடத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் மத்தேயோ புரூனி.

அடிக்கடி ஏற்படும் மிகவும் மோசமான வலி காரணமாக திருத்தந்தை அதிகமாக வேதனையை அனுபவித்தார் என்றும், மருத்துவக்குழுவின் பரிசோதனையின்படி திருத்தந்தைக்கான அறுவை சிகிச்சை ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு நல்ல முறையில் நடந்து முடிந்ததாகவும் தெரிவித்தார் மத்தேயோ புரூனி.

86 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குடலிறக்க அறுவை சிகிச்சையானது எந்தவிதமான இடையூறும் இன்றி மூன்று மணி நேரம் நல்லபடியாக நடந்து முடிந்தது என்றும் திருத்தந்தை தெளிவாக நன்றாக இருக்கிறார் தன்னிடம் நகைச்சுவையுடன் உரையாடினார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் Sergio Alfieri.

திருத்தந்தையின் உடல் நிலை காரணமாக ஜூன் 18ஆம் தேதி வரை திருத்தந்தையின் பொது நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்தேயோ புரூனி அவர்கள், தொடர்ந்து திருத்தந்தையின் உடல் நலனிற்காக செபிக்கவும் கேட்டுக்கொண்டார்.

புதன் காலை வழக்கம் போல் திருப்பீடத்தில் இரண்டு தனிப்பட்ட பார்வையாளர் சந்திப்பு மற்றும் புதன் பொது மறைக்கல்வி உரை ஆகியவற்றை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளுக்கு மறைப்பணிகளின் பாதுகாவலரான குழந்தை இயேசுவின் தெரேசா பற்றி எடுத்துரைத்து அவர் இயேசுவை அன்பு செய்தது போல நாமும் அன்பு செய்ய வேண்டும் என்றும், நம்முடைய சோதனைகள் மற்றும் துன்பங்களை அர்ப்பணித்து அவரைப் போல எல்லோராலும் அறியப்பட்டு நேசிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

2021 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி, பெருங்குடல் அறுவை சிகிச்சை, 2023 மார்ச் 29ஆம் தேதி நுரையியீரல் சுவாசத் தொற்று சிகிச்சை, தற்போது  ஜூன் 7 ஆம் தேதி குடல்இறக்க அறுவை சிகிச்சை என இதுவரை மூன்று முறை ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2023, 13:17