தேடுதல்

ஜெமெல்லி மருத்துவமனை உரோம். ஜெமெல்லி மருத்துவமனை உரோம்.  

திருத்தந்தை விரைவில் குணமடைய தலைவர்கள் செய்தி

கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கால் ஏற்படும் துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இந்தக்கடினமான சூழ்நிலை வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு கற்பிக்கின்றார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறுவை சிகிச்சை  முடிந்து நல்லமுறையில், நல்ல உடல் நலத்துடன் திரும்பி வர பல்வேறு அரசுத்தலைவர்கள் மற்றும் கத்தோலிக்க தலத்திருஅவை தலைவர்கள் செய்தியினை வெளியிட்டு வருகின்றனர்.

ஜூன் 7 புதன்கிழமையன்று பிற்பகலில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அவரது உடல் நலன் முன்னேற்றமடைய வேண்டி செய்தி ஒன்றினை அனுப்பியுள்ள இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்கள் அனைத்து இத்தாலிய மக்களின் அன்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் திருத்தந்தையுடன் இந்நேரத்தில் உடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து கத்தோலிக்க விசுவாசிகளின் செபங்களும், எண்ணற்ற மக்கள், அதாவது, கத்தோலிக்கர்கள் கத்தோலிக்கரல்லாதவர்கள் அனைவரின் செபமும் திருத்தந்தைக்காக என்றும் குறிப்பிட்டுள்ள மத்தரெல்லா அவர்கள், திருத்தந்தை அமைதியான நலமான வாழ்வு, உடனடியான மற்றும் முழுமையான குணமடைதல் ஆகியவற்றைப் பெற்று வாழ செபிப்பதாகவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

CEI எனப்படும் இத்தாலிய ஆயர் பேரவையின் அறிக்கையானது, இத்தாலிய ஆயர்கள் மற்றும் அனைத்து தலத்திருஅவையில் உள்ளவர்களோடும் இணைந்து, திருத்தந்தையுடன் தங்களது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், கூட்டு செப வழிபாடுகள் வழியாக அவர் விரைவில் குணமடைய தொடர்ந்து செபிப்பதாகவும் தெரிவிக்கின்றது.

மருத்துவர்கள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்களின் பணியை இறைவனிடம் ஒப்படைப்பதாகவும், திருத்தந்தை விரைவாக முழுமையாக குணமடைந்து இல்லம் திரும்ப இத்தாலியக் கத்தோலிக்க செயல்பாட்டு அமைப்பின் சிறார், இளையோர், மற்றும் பெரியவர்கள் தொடர்ந்து செபிப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கால் ஏற்படும் துன்பங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இந்தக்கடினமான சூழ்நிலை வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு கற்பிக்கின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளது இத்தாலிய கத்தோலிக்க ஆயர் பேரவை அறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2023, 13:18