தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

அமைதிக்கான முன்முயற்சிக்கு வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை

2014ஆம் ஆண்டு ஜூன் 8 பாலஸ்தீனத் தலைவரும், இஸ்ரேல் தலைவரும் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து புனித பூமியில் அமைதி நிலவச் செபித்த நாள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகில் நடந்து கொண்டிருக்கும் அழிவுதரும் போரைக் கண்டித்து, அமைதிக்கான முன்முயற்சியாக ஜூன் 8 வியாழன் அன்று ஒரு நிமிடம் அமைதியாக செபிக்க உலக மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 7, புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகை, குறிப்பாக உக்ரைனில் பேரழிவை உண்டாக்கும் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மற்றவர்களும் சேர்ந்து செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். 

ஒரு வருடத்திற்கும் மேலாக எண்ணிலடங்கா உயிர்களைப் பலிவாங்கிக்கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பன்னாட்டுக் கத்தோலிக்க செயல்பாடுகளுக்கான அமைப்பின் (IFCA) முன்முயற்சியின்படி ஒவ்வொருவரும் அவரவர் வழக்கப்படி ஜூன் 8, வியாழன் அன்று உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 1 மணிக்கு தலை குனிந்து, அமைதிக்காக ஜெபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பொது மறைக்கல்வி உரையில் பங்கேற்ற போலந்து மற்றும் இத்தாலிய திருப்பயணிகளுக்குத் தன்  வாழ்த்துக்களையும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனையும், பாதிக்கப்பட்ட மக்களையும் மீண்டும் நினைவு கூர்ந்து அவர்களுக்காக சிறப்பாக செபிக்க அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்க செயல்பாடுகளுக்கான அமைப்பின்  உலக அமைதிக்கான இந்த முன்முயற்சியை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என்றும், உலகில் நடந்துகொண்டிருக்கும் போர்களுக்கு முடிவு கட்டவும், அன்பான மற்றும் துன்புறுத்தப்பட்ட உக்ரைன் மக்களுக்காக செபிக்க  வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

IFCA இந்த குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்னவெனில் 2014ஆம் ஆண்டு ஜூன் 8 வத்திக்கான் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட புனித நாள். தொடர்சண்டைகள், அப்பாவி மனித உயிர்களின் இறப்பை உண்டாக்கி உலகத் தலைவர்களின் கவனத்தைக் கவரும் புனித பூமியின் செயலுக்காக பாலஸ்தீனத் தலைவரும், இஸ்ரேல் தலைவரும் வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து புனித பூமியில் அமைதி நிலவச் செபித்தனர்.

அமைதியை ஏற்படுத்துவதற்கென இவ்விரு தலைவர்களும் முதன்முறையாக ஒன்றிணைந்து செபித்த வரலாற்று சிறப்புமிக்க நாள் இந்நாள். வரலாற்றில் இப்படியொரு நிகழ்வு இதுவரை இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2023, 12:57