தேடுதல்

திருத்தந்தையின் உடல் நலனுக்காக மருத்துவமனையின் முன் வைக்கப்பட்டுள்ள மலர்கள் மற்றும் மெழுகுதிரிகள் திருத்தந்தையின் உடல் நலனுக்காக மருத்துவமனையின் முன் வைக்கப்பட்டுள்ள மலர்கள் மற்றும் மெழுகுதிரிகள்  

செபத்தால் உடனிருக்கும் அனைவருக்கும் நன்றி – திருத்தந்தை

ஜூன் 8 வியாழன் அன்று இயேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு மாலையில் திருநற்கருணையைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக செபித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்துள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று வார்த்தைகளாலும், செபத்தாலும், உடனிருப்பாலும் உறுதியளித்துக் கொண்டிருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 9, வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாவது நாளில் அவரது உடல்நலம்பற்றி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த செய்தியின்போது இவ்வாறு கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி.

ஜூன் 8, வியாழன், இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு மாலையில் திருநற்கருணையை பெற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காக செபித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தன் நன்றியினையும் தெரிவித்துள்ளதாகக் கூறினார் புரூனி.

இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா, ஆயர் பேரவைகள், அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள், ஏழை எளிய மக்கள், பம்பினோ ஜேசு குழந்தை மருத்துவமனையின் சிறார் உட்பட திருத்தந்தைக்காக செபிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் தன் நன்றியினைத் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் தொடரும் மருத்துவ சிகிச்சைகள் நன்முறையில் நடைபெற்று வருவதாகவும், திருத்தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்த புரூனி அவர்கள், மருத்துவர் குழுவின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரில் திருத்தந்தை தேவையான ஓய்வினை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றும் எடுத்துரைத்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் உடல் நலமடைய 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்று கூறிய மருத்துவ நிபுணர் அல்பியெரி அவர்கள், 86 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரைவில் குணமாக அவர் வயதிற்கேற்ற மருத்துவ சிகிச்சைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2023, 13:52