தேடுதல்

பல்சமய உரையாடல் நிறுவனத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ். பல்சமய உரையாடல் நிறுவனத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)

பல்சமய உரையாடல் என்னும் கடவுள் அனுபவம் – திருத்தந்தை

நாம் உரையாடும் போது, அவரவர் அனுபவத்தைச் சொல்கிறோம். வரலாற்றின் வெவ்வேறு வழிகளில் நடந்தாலும் நம் அனைவருக்கும் தந்தையான, ஒரே கடவுள் நம்மை உரையாடலுக்கு அழைத்துச் செல்கிறார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பல்சமய உரையாடலின் போது ஒருவர் மற்றவரிடம் தங்கள் அனுபவத்தைச் சொல்கின்றார்கள் என்றும், கடவுளின் அனுபவமாகத் திகழும் இவ்வுரையாடலில் கடவுள் தன்னை எல்லா கலாச்சாரங்களிலும், அந்த கலாச்சாரத்தின் வழியில் வெளிப்படுத்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 5 வெள்ளிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் அர்ஜென்டினாவின் பல்சமய உரையாடல் மாநாட்டில் பங்கேற்பவர்கள் மற்றும் அதன் நிறுவனர்கள் ஏறக்குறைய 110 பேரைச் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்குள் நாமே நடத்தும் உரையாடல் விரிவடைந்து சகோதர சகோதரிகளுக்கு இடையில் வெளியே நடைபெறும் பல்சமய உரையாடல், பயமின்றி நடைபெறுவதும் முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

தன்னுடன் பயணம் செய்த மக்களிடையே கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் உரையாடும் போது, அவரவர் அனுபவத்தைச் சொல்கிறோம் என்றும், வரலாற்றின் வெவ்வேறு வழிகளில் நடந்தாலும் நம் அனைவருக்கும் தந்தையான, ஒரே கடவுள் நம்மை உரையாடலுக்கு அழைத்துச் செல்கிறார் என்றும் எடுத்துரைத்தார்.

நம் சகோதர சகோதரிகளுடன் எதார்த்த உரையாடல் மேற்கொள்ள செல்லும் பாதை எப்போதும் உள்ளது என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நாம் பின்பற்றும் பாதை நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதையேக் கடவுள் விரும்புகிறார் என்றும் எடுத்துரைத்தார்.

இது உண்மையானது என்று கூறும் மற்றவர்களின் பாதையை தான் மதிப்பதாகவும், இது சார்ந்திருத்தல் அல்ல, மாறாக மரியாதை மற்றும் இணக்கமான வாழ்வைச் சார்ந்தது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒருவருக்கொருவர் செபிக்காவிட்டால், முடிவடைந்து விடுவோம் என்றும். ஒருவரையொருவர் முன்னேற்ற ஒன்றிணைந்து செபிப்பதே சாலச்சிறந்தது என்றும் வலியுறுத்தினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2023, 13:19