இளையோர்மீதான நமது அணுகுமுறை மாறட்டும் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இயற்கை வளங்களைக் சூறையாடும் நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவும், எல்லையற்ற பூமியின் வளங்களுடனான நமது உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Gaël Giraud மற்றும் Carlo ஆகிய இருவரும் எழுதியுள்ள “Il gusto di cambiare" அதாவது, ‘மாற்றத்தின் சுவை’ என்ற இத்தாலிய நூல் ஒன்றிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நூலானது தன்னுள் அழகான மற்றும் நல்லவற்றின் உண்மையான 'சுவையை' உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையின் சுவை, நம்பகத்தன்மை, எதிர்காலம் ஆகியவைக் குறித்த இந்தப் பரிமாற்றத்தில் இரண்டு எழுத்தாளர்களும் முன்வைப்பது உலகளாவிய சூழ்நிலையைப் பொறுத்து ஒரு வகையான 'விமர்சனக் கதை' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நம் அனைவருக்கும் புறநிலையாகத் தேவையான மாற்றத்தை இளையோர் உருவாக்குகிறார்கள் என்பதை நாம் நேர்மையுடன் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள்தான் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயற்கை வளங்களைச் சூறையாடும் நமது வாழ்க்கை முறையை மாற்றுவோம் என்றும், எல்லையற்ற பூமியின் வளங்களுடனான நமது உறவைப் புதுப்பித்துக்கொள்வோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளையோர்மீதான நமது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும், காரணம், அவர்கள் சொல்வதை செயலில் காட்டுகிறார்கள் என்றும், தெருக்களில் இறங்கி, ஏழைகளுக்கு நியாயமற்ற மற்றும் சுற்றுச்சூழலின் எதிரியான பொருளாதார அமைப்பிற்கு எதிராகத் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி, வாழ்வுக்கான புதிய வழிகளைத் தேடுகிறார்கள் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விரண்டு ஆசிரியர்களும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாட்டுப் பாதைகளைச் சுட்டிக்காட்டி, இன்று நடைமுறையில் இருக்கும் வளமை என்ற கருத்தை விமர்சிக்கின்றனர் என்றும், சுற்றுச்சூழலுக்கு மரியாதை, உரிமைகளுக்கான மரியாதை, மனித மாண்பிற்கான மரியாதை ஆகியவை இந்தச் செயல்பாடுகளில் அடங்கும் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்