தேடுதல்

ருவாண்டாவில் வெள்ளப் பாதிப்புகள் ருவாண்டாவில் வெள்ளப் பாதிப்புகள்  

ருவாண்டா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தை செபம்

ருவாண்டாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் ஏறத்தாழ 130 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அண்மையில் ருவாண்டாவின் மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நிகழ்ந்துள்ள உயிரிழப்பு மற்றும் அழிவுகளை அறிந்து தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும், அவர்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 4, இவ்வியாழனன்று, இதுகுறித்து ருவாண்டாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Arnaldo Catalan அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் ஆன்மிக நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இப்பேரழிவில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காகவும், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவும் தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ருவாண்டாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் ஏறத்தாழ 130 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன என்றும், 77 பேர் காயமடைந்துள்ள வேளை, அவர்களில் 36 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார் அந்நாட்டின் துணை அரசுச் செய்தித்தொடர்பாளர் Alain Mukuralinda

இதனிடையே, மே 4, இவ்வியாழனன்று, மேற்கு உருவாண்டாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் Édouard Ngirente, இப்பேரழிவில் காணாமல் போனவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2023, 14:08