தேடுதல்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்  (AFP or licensors)

செர்பியா துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு இரங்கல்

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மீது ஆறுதலையும் தூய ஆவியின் அருளையும் வேண்டும் அதே வேளையில், அவர்கள் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் – திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

செர்பியாவில் நடந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தையும் உறுதியான செபத்தையும் இரங்கல் தந்தி ஒன்றின் வழியாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

மே 5 வெள்ளிக்கிழமை பெல்கிரேடின் பேராயர் லாடிஸ்லாவ் நெமெட் அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட செய்தியில், அர்த்தமற்ற இந்த வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கலையும் உறுதியான செபத்தையும் வழங்குவதாகக் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்தெழுந்த இறைவனின் அன்பான அரவணைப்புக்கு இறந்தவர்களின் ஆன்மாவை  ஒப்படைப்பதாகவும், இறந்தவர்களை எண்ணி வருந்துபவர்களின் துயரத்துடன் தானும் ஆன்மிக ரீதியில் ஒன்றிணைவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மீது ஆறுதலையும் தூய ஆவியின் அருளையும் வேண்டும் அதே வேளையில், அவர்கள் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆறுதல் தரும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளியின் முன் மக்கள்
துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளியின் முன் மக்கள்

முதல் துப்பாக்கிச்சூடு

மே 3 புதன்கிழமை பெல்கிரேடில் உள்ள விளாடிஸ்லாவ் ரிப்னிகர் (VLADISLAV RIBNIKAR) தொடக்கப் பள்ளியில் 13 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சகமாணவர்கள் 8 பேர் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர்

இரண்டாவது துப்பாக்கிச் சூடு

மே 4 வியாழன் மாலை மிலாடெனோவாக் (MLADENOVAC), டுபோனா பூங்காவில் ஒரு காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓர் இளைஞன் ஓடும் காரில் இருந்து மக்களை நோக்கி சுடத்தொடங்கியதில் 8 பேர் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம் மற்றும் அவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது

துப்பாக்கிச்சூடு நடந்த பூங்காவின் முன் மக்கள்
துப்பாக்கிச்சூடு நடந்த பூங்காவின் முன் மக்கள்

புதிய துப்பாக்கி அனுமதிகளுக்கு தடை

செர்பியாவின் அரசுத்தலைவர் அலெக்சாண்டர் வூசிக், துப்பாக்கிச் சூடுகள் நம் அனைவருக்கும் எதிரான தாக்குதல்கள் என்று கூறி 1,200 புதிய காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்தும் திட்டம் உட்பட பல புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். மேலும் புதிய துப்பாக்கிகளுக்கான அனுமதிகள் மீதான தடை, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள், துப்பாக்கி வைத்திருப்பவர்களின் உளவியல் சோதனைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் உறுதியளித்துள்ளார் அரசுத்தலைவர் வூசிக்.

மிகக் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்ட செர்பியாவில் இத்தகைய துப்பாக்கிச் சூடுகள் மிகவும் அரிதானவை என்றும் ஐரோப்பாவிலேயே மிக அதிகமாக நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்களில் செர்பியா உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2023, 13:13