தேடுதல்

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்றோர் G7 உச்சி மாநாட்டில் பங்கேற்றோர்  

நினைவுகளின் அடையாளமான ஹிரோஷிமா – திருத்தந்தை

போர் நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது, மனிதர்களின் மாண்பிற்கு எதிரானது மட்டுமன்று நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் எதிர்காலத்திற்கு எதிரானது - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நினைவின் அடையாளமாக விளங்கும் ஹிரோஷிமா இன்றைய அமைதிக்கான அச்சுறுத்தல்களுக்கு திறம்பட பதிலளிக்கவும், தேசிய மற்றும் பன்னாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வலியுறுத்துகின்றது  என்றும், அணுஆயுதப் பயன்பாட்டினால் ஏற்படும் பேரழிவுகளால் மனிதஇனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 20 சனிக்கிழமை ஹிரோஷிமாவில் நடைபெறும், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் அவசரப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் G7 உச்சி மாநாட்டிற்கு தனது ஆன்மீக நெருக்கத்தையும் மாநாடு நல்ல முறையில் நடந்து பலனளிக்க தனது செபத்தினையும் உறுதியளித்து ஹிரோசிமா ஆயர் Alexis-Mitsuru Shirahama அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அச்சுறுத்தல்களிலிருந்து அவசரப் பிரச்சனைகளை விவாதிக்கும் இடமாக ஹிரோசிமா இருப்பதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019 ஆம் ஆண்டு தான் மேற்கொண்ட ஜப்பான் திருத்தூதுப் பயணத்தின் போது கூறிய வார்த்தைகளான, போர் நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவது, மனிதர்களின் மாண்பிற்கு எதிரானது மட்டுமன்று நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் எதிர்காலத்திற்கு எதிரானது என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள்
மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள்

உலகளாவிய பெருந்தொற்றுநோய், ஆயுத மோதல்கள், இரஷ்யா உக்ரைன் போர் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உறவு மற்றும் ஒற்றுமையுடன் இணைந்துதான் மனித குடும்பத்தின் காயங்களைக் குணப்படுத்தவும், நீதியும் அமைதியுமான உலகைக் கட்டியெழுப்பவும் முடியும் என்பதை கடந்த சில வருடங்களின் நிகழ்வுகள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இருபத்தியோராம் நூற்றாண்டின் பன்முக உலகில், அமைதிக்கான விருப்பம் என்பது பாதுகாப்பின் தேவை மற்றும் அதற்கு உறுதி அளிப்பதற்கான திறமையான வழிமுறைகளின் பிரதிபலிப்புடன் நெருக்கமாக தொடர்புடையது என்றும், உணவு, நீர் சுற்றுச்சூழலுக்கு மரியாதை, நலப்பாதுகாப்பு, எரிபொருட்கள் மற்றும் உலகப் பொருட்களின் சமமான விற்பனை உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஒருங்கிணைத்ததாக உலகப்பாதுக்காப்பு இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இத்தகையப் பல பிரச்சினைகளைத் தழுவும் திறன் கொண்ட உலகப் பாதுகாப்பு ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அமைதிக்கான விருப்பம் என்ற பிரதிபலிப்பு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹிரோஷிமாவில் நடைபெறும் G7 உச்சிமாநாடு நீடித்த அமைதி, நிலையான பாதுகாப்பிற்கான அடித்தளங்களை அமைப்பதில் தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்த தான் தொடர்ந்து செபிப்பதாகவும் நீதி மற்றும் அமைதிக்கான அவர்களின் முயற்சிகளுக்குத் தன்  நன்றியினையும் ஆசிரையும் அளித்து அக்கடிதத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2023, 12:54