தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (REMO CASILLI)

தலைமைத் தணிக்கையாளரின் கடமைகளை தெளிவுபடுத்தியுள்ள திருத்தந்தை

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான Praedicate Evangelium-இன் அடிப்படையில் புதிய மாற்றங்கள் அமைந்துள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருப்பீடம்  மற்றும் வத்திக்கான் நகர நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பியல்புகளைத் தெளிவுபடுத்தும் விதமாக சீர்திருத்தம் ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைமைத் தணிக்கையாளரின் அலுவலகம், அப்போஸ்தலிக்கப் பதவி காலியாக இருந்தாலும் கூட, அதாவது, திருத்தந்தையின் மரணம் மற்றும் புதிய திருத்தந்தையின் தேர்வுக்கான கர்தினால்களின் கூட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில், சாதாரண நிர்வாகம் மற்றும் கணக்கியல் மேற்பார்வையை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், ஏப்ரல் 24, அன்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் குறிப்பிடப்பட்ட குறிப்புகளில் இதுவும் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 24, இப்புதனன்று வெளியிடப்பட்ட இந்தச் சீர்திருத்தம், விதிமுறைகளில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்து, கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான Praedicate Evangelium-ன் வழியில் தலைமைத் தணிக்கையாளர்  தொடர்பான 2019-ஆம் ஆண்டு சட்டங்களை சீரமைக்கிறது.

திருப்பீடத்தில் திருத்தந்தையின் இடம் காலியாக இருக்கும்போது, ​​திருப்பீடத் தலைமையக  அனைத்துத் துறைகளிலும் அத்தியாவசியமான அடிப்படை நிர்வாகத்தை செயலர்களேக் கவனித்துக் கொள்வார்கள் என்பதை அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான Praedicate Evangelium கூறும் வேளையில், புதிய சீர்திருத்தத்தின்படி, அக்காலக்கட்டத்தில் தலைமைத் தணிக்கையாளரின் நிர்வாகச் செயல்பாடுகள், திருத்தந்தையின் அப்போதைய கருவூலத் தலைவரின் ஆலோசனையின் கீழ் இயங்கும்.

இந்தச் சீர்திருத்தத்தின்படி, திருப்பீட தலைமைப்பதவி  நிரப்பப்படாமல் இருக்கும் வேளையில், தணிக்கைக் குழுவின் இயல்பான நிர்வாகச் செயல்பாடுகள்,  எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது  எனவும் விளக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தம் கூறும் இன்னொரு முக்கியமான விடயம் என்னவெனில், தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் தன்மையை உறுதிப்படுத்துவதாகும். "2022-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட புதிய அப்போஸ்தலிக்க அமைப்புமுறைச் சட்டமான Praedicate Evangeliumஇன் பிரிவு 222-224ல் குறிப்பிடப்படாத அனைத்தையும் பொறுத்தவரையில், 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்திற்கான சட்டத்தில் உள்ள விதிகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும்” என்று ஆவணம் கூறுகிறது.

இன்னும் துல்லியமாக, தலைமைத் தணிக்கையாளர் அலுவலகத்தின் சட்ட விதிமுறைத் தொகுப்பின், பிரிவு 1 இன் பத்திகள் 1 மற்றும் 3இன் செல்லுபடியாகும் தன்மையை இது உறுதிப்படுத்துகிறது. அதாவது, திருப்பீடத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வத்திக்கான் நகர நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்ற திருப்பீட நிறுவனம் இது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

"மெரிடா மாநாட்டு விதிமுறைகளின்படி ஊழல் எதிர்ப்பு ஆணையமாக, 2016- ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி முதல் இந்த தலைமைத் தணிக்கையாளர் அலுவலகம், திருப்பீடம்  மற்றும் வத்திக்கான் நகர நிர்வாகத்தில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது" என்பதும், திருத்தந்தையின் புதிய சீர்திருத்த விதிமுறைகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 14:56