தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (REMO CASILLI)

சீனக் கிறிஸ்தவர்களுடன் என் நெருக்கத்தை வெளிப்படுத்துகிறேன்

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2007-ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தலத் திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினத்தை நிறுவினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சீனாவிலுள்ள நமது சகோதரர் சகோதரிகளுக்கு எனது எண்ணங்கள் மற்றும் நெருக்கத்தை உறுதிப்படுத்துகிறேன் என்றும், அவர்களின் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையில் பங்குகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 24, இப்புதனன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தான் வழங்கிய புதன் பொதுமறைக்கல்வி உரைக்குப் பின்பு இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

சீனாவில் துயருறும் மேய்ப்புப்பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு தான் ஒரு சிறப்பு சிந்தனையை வழங்குவதாகவும், இதனால் உலகளாவிய திருஅவையின் ஒன்றிப்பு மற்றும் ஆதரவினால் அவர்கள் ஆறுதலையும் ஊக்கத்தையும் அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

மே 24, சீனாவிலுள்ள தலத்திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினம் என்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவை மற்றும் அனைவரின் நன்மைக்காகவும் துயரங்களைத் தாங்கி, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நற்செய்தி அதன் முழுமையிலும், அழகிலும், சுதந்திரத்திலும் அறிவிக்கப்படுவதற்காகக் கடவுளிடம் இறைவேண்டல் செய்யுமாறு அனைத்துக் கிறிஸ்தவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.

இச்சிறப்பு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த நமபிக்கையாளர்களில் இத்தாலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீனக் கத்தோலிக்கச் சமூகத்திற்குப் பணியாற்றி வரும் பல அருள்பணியாளர்களும் இருந்தனர்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், 2007-ஆம் ஆண்டு சீனாவிலுள்ள தலத் திருஅவைக்கான உலக இறைவேண்டல் தினத்தை நிறுவினார். இத்தினம், ஆண்டுதோறும் மே 24-ஆம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்தவர்களின் சகாய அனைனையின்  திருநாளன்று நினைவுகூரப்பட்டு செபிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 14:46