தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் உரைநிகழ்த்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் உரைநிகழ்த்துகிறார்   (AFP or licensors)

திருஅவை திறந்த மனம்கொண்டதாக இருக்கட்டும் : திருத்தந்தை

வத்திக்கான் திருச்சங்கம் முடிவடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று ஒன்றித்தல் என்பது அவசரமாகத் தேவைப்படுகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பரந்த மனம் கொண்ட, இது நமது திருஅவை, ஆயர் அமைப்புகளும் வழிமுறைகளும் நமக்கானது என்று உணரக்கூடிய கிறிஸ்தவச் சமூகங்கள் இன்று நமக்குத் தேவை என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 25, இவ்வியாழன்று, ‘இத்தாலியில் உள்ள தலத்திருஅவைகளின் ஒன்றிணைந்த பயணம்’ என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்குபெறவுள்ள ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்கூட்டம் மனமாற்றம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் தனித்துவமான ஆன்மிக அனுபவமாகும் என்றும் இது உங்கள் திருஅவைக் குழுமங்களை மேலும் மறைபணியாளர்களாக மாற்றவும், இன்றைய உலகில் நற்செய்திப் பணிக்குத் தயாராக இருக்கவும் தூண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று முக்கிய காரியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

தொடரட்டும் பயணம்

மனதில் தோன்றிய கேள்விகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பான முதல் பலனை நீங்கள் அறுவடை செய்யும்போது, ​​உங்கள் பயணத்தை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து செல்லுங்கள் என்றும், தூய ஆவியானவர் உங்களை வழிநடத்தட்டும் என்றும் கூறினார்.

கட்டமைப்புகள், அதிகாரத்துவம் மற்றும் சம்பிரதாயம் ஆகியவற்றால் எடைபோடப்பட்ட ஒரு திருஅவை வரலாற்றில் பயணிக்கவும், நம் காலத்தின் ஆண்களையும் பெண்களையும் சந்திக்கவும் போராடும் என்பதையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

திருஅவையை ஒன்றிணையுங்கள்

இரண்டாவதாக, திருஅவையை ஒன்றிப்புக்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் திருச்சங்கம் முடிவடைந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இது அவசரமாகத் தேவை என்று நாம் உணர்கிறோம் என்றும் கூறினார்.

இந்த அர்த்தத்தில், நாம் எப்படி பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதையும், இந்தக் காலத்திலும் இந்தத் திருஅவையிலும் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பதைப் புரிந்துகொள்ளவும் செல்படுத்தவும் தூய ஆவியானவரின் அருளைக் கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை

திறந்த மனம் கொண்ட திருஅவை

மூன்றாவதாக, திறந்த மனம் கொண்ட திருஅவையாக இருக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் ஒருவரின் இணைப்பொறுப்பை மீண்டும் கண்டுபிடிப்பது என்பது அதிகார விநியோகத்தின் உலகத் தர்க்கங்களைச் செயல்படுத்துவதைக் குறிக்காது, ஆனால், அவரது விருப்பங்கள் மற்றும் ஒருமைப்பாட்டின் வளமையில் மற்றவரை அங்கீகரிக்கும் விருப்பத்தை வளர்ப்பதாகும் என்றும் விளக்கினார்.

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், ஏமாற்றம் அடைந்தவர்கள், வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் குரலுக்கு நம் சமூகத்தில் எவ்வளவு இடம் கொடுக்கிறோம் என்றும், எந்தளவுக்கு உண்மையாக கேட்கிறோம் என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

நம் சகோதரர் சகோதரிகளின் இதயங்களில் பற்றி எரியும் அன்புத் தீயை அணைப்பதற்கல்ல, மாறாக, அதனைத் தூண்டவும், உண்மையைத் தேடும் அவர்களின் மனசாட்சியின் ஒளிச்சுடரால் நம்மை ஒளிரச் செய்யவுமே நாம் அனுப்பப்பட்டுளோம் என்பதை உணர்ந்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 14:45