தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

நற்செய்திப் பணியை உலகிற்கு அறிவிக்கும் கலைஞர்களாக

கலைக்கு சவாலாக உள்ள நற்செய்தியும் ஒரு புரட்சிகரமான ஆற்றலைத் தன்னுள் கொண்டுள்ளது, அதை கலையாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் பரிசுகள் திருஅவைக்குத் தேவை

மெரினா ராஜ் - வத்திக்கான்

கனவு காணும் கண்களாக, மனித கவலையின் குரல்களாக செயல்படவேண்டும் என்கின்ற மிகப்பெரிய பொறுப்பு கலைஞர்களுக்கு உள்ளது என்றும், கலைகளால் இயேசுவின் நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கும் பணியினைச் செய்யவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 27 சனிக்கிழமையன்று வத்திக்கானின் சாந்தா கிளமெந்தினா அறையில் La Civiltà Cattolica மற்றும் Georgetown பல்கலைக்கழகம் இணைந்து, கத்தோலிக்கக் கண்ணோட்டத்தில் உலகளாவிய அழகியல் என்ற தலைப்பில் நடத்தும் கருத்தரங்கில் பங்குபெறுபவர்களை சந்தித்துப் பேசிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலக்கியம் நெஞ்சில் குத்தும் முள் போன்று, நம்மை சிந்திக்க தூண்டுகின்றது, காட்சிப்பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கண்கள் பார்ப்பதற்கு மட்டுமன்றி, கனவு காண்பதற்கும் உதவுகின்றன என்றும், ஒரு புதிய உலகத்திற்காக ஏங்கும் மனிதர்களாகிய நாம், விரும்பியதை, கனவு கண்டதை அடைய கலை உதவுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.

இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கூறுவது போல நமக்கு சதையாலான மற்றும் கண்ணாடியாலான இரண்டு கண்கள் உள்ளன என்றும் சதையாலான  கண்ணால், நமக்கு முன்னால் இருப்பதைப் பார்க்கிறோம், கண்ணாடியாலான கண்ணால் நம் கனவுகளைப் பார்க்கிறோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பார்வை மற்றும் கனவு இரண்டையும் கண்களாகக் கொண்ட கவிஞர்கள், ஆழமாகப் சிந்தித்துப் பார்த்து, நம் கண்முன் இருப்பதை வித்தியாசமாகப் பார்க்க வழிகாட்டுகின்றார்கள் என்றும் நமது கற்பனை, எதார்த்தத்தைப் பார்க்கும் விதம் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்திற்கு ஒரு சவாலாக அக்கலைஞர்களின் கலை இருக்கின்றது என்றும் கூறினார்.

கலைக்கு சவாலாக உள்ள நற்செய்தியும் ஒரு புரட்சிகரமான ஆற்றலைத் தன்னுள் கொண்டுள்ளது என்றும், அதை கலையாக வெளிப்படுத்தும் கலைஞர்களின் பரிசுகள் திருஅவைக்குத் தேவை என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலைஞர்கள் அமைதியற்ற மனித ஆற்றலின் குரல்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கையின் அழகான மற்றும் சோகமான எதார்த்தங்களை முன்வைப்பதால், கலை ஆற்றலை மட்டுமன்றி ஆறுதலை அளித்து கவலையை நீக்குகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளமான நிலப்பரப்பான கலை எதார்த்தமாக, ஆக்கப்பூர்வமாக, நெகிழ்வாக, சக்திவாய்ந்த செய்திகளை எடுத்துவரும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வரம்புகளுக்கு அப்பால் செல்வது, ஆன்மீக அமைதியின்மை போன்றவற்றால் மனிதகுலத்தை குறைத்து மதிப்பிடாமல் ஆக்கப்பூர்வமாக கலைகள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கலை வடிவில் நற்செய்திப் பணி மனிதகுலத்தின் சிறந்த கவிஞரான கடவுளைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு உதவுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

இயேசுவைத் தொடவும், அவருடைய நெருக்கத்தை உணரவும், அவரை உயிருடன் பார்க்கவும், நம் கண்களைத் திறக்கவும் கலைகள் உதவுகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருடைய வாக்குறுதிகள் நம் கற்பனையை ஈர்க்கின்றன, அவை நம் வாழ்க்கை, வரலாறு, மனிதகுலத்தின் எதிர்காலம் போன்றவற்றை ஒரு புதிய வழியில் கற்பனை செய்ய உதவுகின்றன என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2023, 13:39