தேடுதல்

குருத்து ஞாயிறு வழிபாட்டின் போது திருத்தந்தை குருத்து ஞாயிறு வழிபாட்டின் போது திருத்தந்தை  

செபத்தின் வல்லமையை உணர்ந்தவர் திருத்தந்தை

துணிவில்லாத செபம் உண்மையான ஜெபம் அல்ல," என்றும், கடவுள் நமக்கு செவிசாய்ப்பார் என்று நம்பிக்கையுடன் கதவைத் தட்டும் துணிவு நமக்கு வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

Jorge Mario Bergoglio என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காக செபிக்கும்படி மக்களைக் கேட்டுக் கொள்வதை தனது குணமாகக் கொண்டவர் என்றும், திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பும் கர்தினாலாக இருந்த போதும் இவ்வாக்கியம் இல்லாமல் தனது செபம், கடிதம் உரையை நிறைவு செய்ததில்லை என்றும் கூறினார் அந்திரேயா தொர்னியெல்லி.

மார்ச் மாத இறுதியில் சுவாசத் தொற்றுநோய் சிகிச்சை காரணமாக உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குணநலன்களையும் செபத்தின் வல்லமை பற்றிய அவரது எண்ணங்களையும் வத்திக்கான் செய்திகளின் தலையங்கத்தில், கட்டுரையாக இவ்வாறு வெளிப்படுத்தினார் திருப்பீடத் தகவல் தொடர்பு செய்தித்துறையின்  இயக்குனர் அந்திரேயா தொர்னியெல்லி.

அர்ஜென்டினா நாட்டு இயேசுசபை அருள்பணியாளரரான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “எனக்காக செபிக்க மறவாதீர்கள்“ என்ற வார்த்தை, ஆயிரம் முறை திரும்ப, திரும்ப சொன்னாலும், சலிப்பில்லாத, மகிழ்வான, மாறாத பழக்கமாகவும், ஆற்றல் மிக்க வரிகளாகவும் மாறிவிட்டன என்றும் கூறினார் தொர்னியெல்லி.

திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, அர்ஜென்டினா பத்திரிகையாளர் ஜார்ஜ் ரூய்லன் அவர்களின் கட்டுரையில் குறிப்பிடப்படுவது போல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Buenos Aires பேராயராக இருந்தபோது தனது உடல் நலனுக்காக செபிக்க கர்தினால் ஒருவர் திருத்தந்தையிடன் செபிக்கக் கேட்டுக் கொண்டதாகவும் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் அவரை மீண்டும் சந்தித்த திருத்தந்தை, இன்னும் தொடர்ந்து உங்களுக்காக நான் செபிக்க வேண்டுமா என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது தனிப்பட்ட செபத்தில் பிறருக்காக செபித்து அவர்களுக்கு இறைவனின் உடனிருப்பையும், பாதுகாப்பையும் கேட்பவர் என்றும், தேவையுள்ள மனிதர்களுக்கு செபத்தின் வழியாக தனது உடனிருப்பை வெளிப்படுத்துபவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார் தெர்னியெல்லி.

2013 அக்டோபர் 13, அன்று, சாந்தா மார்த்தா இல்லத்தில் நடைபெற்ற திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "செபத்தின் துணிவு" பற்றிக் கூறியதை நினைவு கூர்ந்த தொர்னியெல்லி “எப்படி செபிப்பது? வழக்கத்திற்கு மாறாக, பக்தியுடன் ஆனால் அமைதியாக ஜெபிக்கிறோமா? நாம் வேண்டுவதைக் கேட்க, இறைஅருளைக் கேட்க, கடவுளுக்கு முன்பாக துணிவுடன் நிற்கிறோமா? என்ற திருத்தந்தையின் கேள்விகளையும் நினைவு கூர்ந்தார்.

துணிவில்லாத செபம் உண்மையான ஜெபம் அல்ல," என்றும், கடவுள் நமக்கு செவிசாய்ப்பார் என்று நம்பிக்கையுடன் கதவைத் தட்டும் துணிவு நமக்கு வேண்டும் என்றும் குறிப்பிட்ட தொர்னியெல்லி, கேட்பவர் பெறுகிறார், தேடுகிறவர் கண்டடைகிறார், தட்டுகிறவருக்குத் திறக்கப்படும் என்ற நற்செய்தி வரிகளுக்கு ஏற்ப ஒருவர் நம்பிக்கையுடன் கேட்க வேண்டும், தேடவேண்டும், தட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2023, 13:14