எலிசபெத் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆர்ப்பாதுவாவின் எலிசபெத் ஆலயம்
‘ஆர்ப்பாதுவா இல்லத்தின் புனித எலிசபெத் ஆலயம்’ நகரின் ரோஜாக்கள் வளாகத்தில் அமைந்துள்ளது. புடாபெஸ்ட் நகரின் யூத வரலாற்றைக் கொண்ட 7ஆவது மாவட்டத்தின் இந்த வளாகம், வேலியிடப்பட்ட பொது பூங்காவால் சூழப்பட்டுள்ளது. 1895ஆம் ஆண்டு உருவான இக்கட்டிடம் எர்செபெட்வாரோஸ் மாவட்டத்தில் கத்தோலிக்க மக்களின் அதிகப்படியான எண்ணிக்கையினால் உருவானது. மக்களுக்கு ஒரு புதிய ஆலயம் மற்றும் பங்குதளத்தின் தேவையை முன்னிட்டு இக்கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்நோக்கத்திற்காக, பேராயர் János Simor தற்போதைய ரோஸ் வளாகத்தை விலைக்கு வாங்கி, ஆறு கட்டிடக் கலைஞர்கள் தங்கள் திட்டங்களுடன் பங்கேற்ற ஒரு போட்டியைத் தொடங்கினார். அறுவரில் நடுவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரபலமான ஹங்கேரிய பாராளுமன்றத்தை கட்டியவரும், அறிவியல் கழகத்தின் பேராசிரியருமான Imre Steindl.
பேரரசர் பிரான்சிஸ்கோ ஜோசப் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, வெளிப்புற வேலைகள் 1897 ஆம் ஆண்டின் இறுதியில் முடிக்கப்பட்டன. அதன் பின் உள்புற பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டு, 1901ஆம் ஆண்டில் ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது. கட்டிடக் கலைஞர் Steindl தனது திட்டத்தில் பிரெஞ்சு கோதிக் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்ப தீர்வுகளுடன் இணைத்து செயல்படுத்தினார். இந்த கட்டிடம், 76 மீட்டர் உயரமுள்ள இரண்டு கோபுரங்களையும், கோதிக் பாணியில் ரோஜா சாளரத்தால் அலங்கரிக்கப்பட்ட முகப்பையும் கொண்டுள்ளது. முகப்பில் மிக்லோஸ் கோலோவின் அன்னை மரியா, புனித ஸ்தேவான், புனித லடிஸ்லாஸ் மற்றும் முழங்காலிட்ட வானதூதரின் உருவங்கள் காணப்படுகின்றன. அதனுடன் நாடு மற்றும் நகரத்தை அடையாளப்படுத்தும் சின்னங்களும் காணப்படுகின்றன. ஓர் அறுகோண நற்கருணைப் பேழை மற்றும் எண்கோண படிக்கட்டுடன் கூடிய கோபுரம் ஆகியவை கட்டிடத்தின் கட்டமைப்பை வகைப்படுத்துகின்றன. மஞ்சள் நிற செங்கற்கள் மற்றும் இயற்கை கற்களால் உருவான இவ்வாலயம், 1,800 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டு 2,600 பேர் அமரும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டு, ஹங்கேரியின் புனித எலிசபெத் அவர்களின் மறைவின் 700 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 1931 ஆம் ஆண்டில், ஆலயத்தின் உட்புறம் புனிதரின் முழு உருவச் சிலையானது ஹங்கேரிய மன்னர் இரண்டாம் ஆண்ட்ரூ அவர்களால் நிறுவப்பட்டது. சிற்பி ஜோசெஃப் டாம்கோவால் உருவாக்கப்பட்டது இத்திருவுருவம். இரண்டாம் உலகப் போரின் குண்டுவெடிப்புக்களால் வளாகமும் ஆலயமும் மிக மோசமாக சேதமடைந்தது. 1992ஆம் ஆண்டில் புனித எலிசபெத் அறக்கட்டளை வழியாக ஆலயம் மறுசீரமைக்கப்பட்டு அதன் முந்தைய பெருமையை மீண்டும் பெற்றுள்ளது.
ஹங்கேரியின் புனித எலிசபெத் ஆலயத்தில் ஏழைகள் மற்றும் குடியெயர்ந்தோரை உள்ளூர் நேரம் காலை 10.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.45 மணிக்கு சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் ஹங்கேரியின் காரித்தாஸ் தலைவர் மற்றும் புனித எலிசபெத் ஆலயத்தின் பங்குத்தந்தை ஆகியோரால் திருத்தந்தை வரவேற்கப்பட்டார்.
புனித நீரால் சிலுவை அடையாளம் வரைந்து அங்குள்ளோரை ஆசீர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆலயத்தில் பீடம் வரை பவனியாக மக்களால் அழைத்துச் செல்லப்பட்டார். காரித்தாஸ் தலைவரின் உரையைத் தொடர்ந்து கிரேக்க கத்தோலிக்க குடும்பம், குடிபெயர்ந்தோர் குடும்பம், நிரந்தர திருத்தொண்டர் அவரது மனைவி ஆகியோர் தங்களது சாட்சிய வாழ்வைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருத்தந்தை தனது திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாளுக்கான முதல் உரையைத் துவக்கினார். தன் உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரானன்சிஸ் அவர்கள் இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்