தேடுதல்

‘உயிர்த்த கிறிஸ்துவே நமது எதிர்காலம்’ : திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுளின் புனித மக்களுக்கு இறைத்தந்தையின் முகத்தைக் காட்டவும், குடும்ப உணர்வை உருவாக்கவும் முற்படுவோம். கடினமனம் கொண்டிருப்பதைத் தவிர்ப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரில் 28, வெள்ளிக்கிழமையன்று, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலுள்ள புனித ஸ்தேவான் இணைப் பேராலயத்தில் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர் மற்றும் அருள்பணித்துவ மாணவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.

அன்புநிறைந்த சகோதரர் சகோதரிகளே! மாறிவரும் இவ்வுலகில், ‘கிறிஸ்து நமது எதிர்காலம்’ என்று சாட்சியமளிக்க விரும்புகின்றோம். வரலாற்றின் மையமான உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே உண்மையில் நமது எதிர்காலம். அனைத்து பலவீனங்களையும் கொண்டுள்ள நமது வாழ்வு அவரது கரங்களில் உள்ளது. இதை எப்போதாவது மறந்தால், இறைபணியாளர்கள் மற்றும் பொதுநிலையினாராகிய நாம்  உலகிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மனித வழிகளைத் தேடத் தொடங்கிவிடுவோம்.

இருவிதமான அணுகுமுறைகள்/சோதனைகள்

இங்கே, திருஅவையாக, நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய இருவிதமான அணுகுமுறைகள் அல்லது சோதனைகள் குறித்துக் குறிப்பிட விரும்புகின்றேன். முதலாவதாக, நிகழ்காலத்தின் நம்பிக்கையற்ற அல்லது ஆர்வமற்ற (bleak reading) வாசிப்பு. அதாவது, எல்லாமே இழக்கப்பட்டுவிட்டது, கடந்த நாள்களின் மதிப்பீடுகளை இழந்துவிட்டோம், நாம் எங்குச் செல்கிறோம் என்றேத் தெரியவில்லை என்று வலியுறுத்துபவர்களின் தோல்விவாதத்தால் தூண்டப்படுகிறது இது. இரண்டாவது, ஒரு வசதியான இணக்கவாதத்தின் அடிப்படையில் எல்லாமே அடிப்படையில் நன்றாகவே இருக்கிறது, உலகம் மாறிவிட்டது, அதற்குத் தக்கவாறு நாமும் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும் என்ற குழந்தைத்தனமான அல்லது வெகுளித்தனமான (naive reading) வாசிப்பு.

எனவே, இருண்ட தோல்விவாதத்தையும் உலகியல் இணக்கவாதத்தையும் எதிர்த்துப் போராட நற்செய்தி வாசிப்பு நமக்குப் புதிய பார்வையைத் தருகின்றது. இது தெளிந்துத் தேர்தலின் அருளை நமக்கு அளிக்கின்றது, நமது நேரத்தை திறந்த மனதோடு, ஆனால், இறைவாக்கிற்குச் செவிமடுக்கும் திறனோடு (prophetic receptivity) அணுக உதவுகிறது.

இதற்கு இயேசு கூறும் அத்தி மர உவமை (காண்க. மாற் 13:28-29) குறித்து சிந்திக்க விழைகிறேன். எருசலேம் ஆலயத்தின் பின்புலத்தில் இயேசு இதனைக் கூறுகின்றார். அதாவது, உலகக் காரியங்களில் மூழ்கிப்போய், அதில் தங்கள் பாதுகாப்பையும், ஆடம்பரத்தையும், வசதிவாய்ப்புகளையும் தேடுபவர்களுக்கு, இயேசு கூறுவது இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதுதான். அதேவேளையில், எல்லாமே கடந்து போகும்போதும், மனிதக் கோவில்களாகிய இதயங்கள் அழிவுறும்போதும்,  பயங்கர சம்பவங்கள் அரங்கேறும். வன்முறைகளும் துன்புறுத்தல்களும் நிகழும். ஆனால் அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை செய்தியைத் தருகின்றார் (வச.26) இயேசு.

அப்படியானால், நாம் வாழும் காலங்களுக்கு, அவற்றின் மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப நம் மனங்களைத்  திறக்கவும், நற்செய்தி கூறுவது போல, ஆண்டவர் வரவிருக்கும் காலத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு பழம்தரும் செடியாக இருக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். மேலும் தற்போதைய காலத்தை விளக்குவதற்கும், நற்செய்தியின் விதைகளை விதைப்பதற்கும், கனிகொடாத கிளைகளை தறித்து எறிவதற்கும், நற்கிளைகள் கனிகொடுக்க அனுமதிப்பதற்கும் நாம் அழைக்கப்படுகிறோம்.

இறைவாக்கிற்குச் செவிமடுக்கும் திறன்

இறைவாக்கிற்குச் செவிமடுக்கும் திறனைப் பெறுவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம்.  இத்திறனை பெறுவது என்பது, இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் உட்பட நம்மைச் சுற்றியுள்ள உலகில் கடவுளின் அடையாளங்களை எவ்வாறு அங்கீகரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதாகும். அதேவேளை, உலகக் காரியங்களுக்கு அடிபணிந்து விடாமல், கிறிஸ்தவ நம்பிக்கையின் அறிவிப்பாளர்களாக, சாட்சிகளாக, எல்லாவற்றையும் நற்செய்தியின் ஒளியில் காணக் கற்றுக்கொள்வது.

இந்த நாட்டிலும், அதன் உறுதியான நம்பிக்கை பாரம்பரியத்துடன், மதச்சார்பின்மை (secularism) பரவுவதையும் அதன் விளைவுகளையும் காண்கிறோம், இது பெரும்பாலும் குடும்பத்தின் ஒருமைப்பாட்டையும் அழகையும் அச்சுறுத்துகிறது. பொருள்முதல்வாதம் (materialism) மற்றும் இன்பக் கொள்கைவாதம் (hedonism) குறிக்கப்பட்ட வாழ்க்கை முறைகளுக்கு இளைஞர்களை ஆட்படுத்துகின்றன. மேலும் புதிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் நிறைந்த இருவேறுபட்ட நம்பிக்கைகளுக்கு இட்டுச் செல்கின்றன.

இம்மாதிரியான வேளைகளில், கடுமை, நிராகரிப்பு மற்றும் மோதல் மனப்பான்மையுடன் இவற்றிற்குப் பதிலளிக்க நாம் ஆசைப்படலாம். இருப்பினும்கூட, இந்தச் சவால்கள் கிறிஸ்தவர்களாகிய நமக்கான வாய்ப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம், ஏனென்றால் அவை நம் நம்பிக்கையை பலப்படுத்துவதுடன் சில காரியங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள நம்மை அழைக்கின்றன. இந்தச் சவால்கள் எவ்வாறு நற்செய்தியுடன் உரையாடலில் நுழைய முடியும் என்று அவை நம்மைக் கேட்க வைக்கின்றன மற்றும் புதிய அணுகுமுறைகள், முறைகள் மற்றும் தகவல்தொடர்பு வழிமுறைகளைத் தேட வேண்டும் என்பதையும் காட்டுகின்றன.  

நமது தற்போதைய சூழ்நிலையுடன் உரையாடலில் ஈடுபடுவதற்கான அர்ப்பணிப்பு, கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன் கொண்ட நற்செய்தியின் சாட்சியாக கிறிஸ்தவ சமூகம் இருக்க வேண்டும் என்றும், கேள்விகள் மற்றும் சவால்களுக்கு அச்சமின்றி பதிலளிக்கும் திறன் கொண்டிருக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றது. இன்றைய உலகில் இது எளிதானது அல்ல; அதற்கு பெரும் முயற்சி தேவை.

ஒன்றிப்புக்குச் சான்று பகர்வோம்

ஆண்டவர் இயேசு நமக்குக் கட்டளையிட்டபடி, அவருடைய ஆவியாரின் வரமாகிய அன்பில் நாம் நிலைத்து வாழ முடிந்தால், நல்ல மேய்ப்புப் பணி என்பது சாத்தியமாகும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நாம் ஒருவரையொருவர் அந்நியப்படுத்திக் கொண்டால், அல்லது பிளவுகள் கொண்டிருந்தால், நமது சிந்தனை முறைகளிலும், வெவ்வேறு குழுக்களிலும் நம்மைக் கடினப்படுத்திக்கொண்டால், நாம் பலன் கொடுக்க மாட்டோம்.

ஒன்றிப்புக்குச் சான்று பகர்வதே நமது மேய்ப்புப் பணியின் முன்னுரிமை என்பதை எப்போதும் உங்கள் நினைவில் வையுங்கள். ஏனென்றால், ஒன்றிப்பு மற்றும் பிறரன்புப் பணி எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார்.

நமது மனிதப் பிரிவினைகளை முறியடித்து, இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் இணைந்து பணியாற்றுவோம்! நற்செய்தியின் வல்லமையில் மூழ்கி, இறைவேண்டலில், குறிப்பாக, ஆராதனையிலும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்பதிலும், தொடர் உருவாக்கம், உடன்பிறந்த உறவு, உடனிருப்பு மற்றும் பிறர் மீது கரிசனையை வளர்த்துக் கொள்வதிலும் நாம் அக்கறைகாட்டுவோம். வாழ்க்கை என்னும் ஒரு உயர்ந்த கருவூலம் நமது கரங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, நற்செய்திக்குப் புறம்பான காரியங்களைத் தேடியலைவதில் நமது நேரங்களை வீணடிக்க வேண்டாம்.

இறைத்தந்தையின் முகம் காட்டுவோம்

அருள்பணியாளர்களுக்கு நான் சொல்ல விரும்பும் இன்னொரு காரியம் என்னவென்றால், கடவுளின் புனித மக்களுக்கு இறைத்தந்தையின் முகத்தைக் காட்டவும், குடும்ப உணர்வை உருவாக்கவும் முற்படுவோம் என்பதுதான். இறுக்கமான அல்லது கடினமான மனம் கொண்டிருப்பதைத் தவிர்ப்போம், அதற்குப் பதிலாக மற்றவர்களை இரக்கத்துடனும் கனிவுடனும் உற்றுநோக்குவோம்.

துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுடன் நெருக்கமாக இருப்பது, விருந்தோம்பல் தேடும் புலம்பெயர்ந்தோர், பிற இனத்தவர் மற்றும் தேவையில் இருப்போருக்கு இறைவனின் ஆறுதலைக் கொண்டுவருவது ஆகிய இவைகள்தாம் இறைவாக்கிற்குச் செவிமடுக்கும் திறனைப் பெறுவதற்கான நமது பயிற்சியாக அமைகின்றன.

ஒருவருக்கொருவர் செவிமடுக்கும் திறன்கொண்ட, உரையாடல் மற்றும் மிகவும் பலவீனமானவர்களைக் கவனித்துக் கொள்ளும் திறன் கொண்ட, அனைவரையும் வரவேற்பதிலும் நற்செய்தியின் இறைவாக்குச் செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்வதில் துணிவு கொண்டதொரு திருஅவையே நாம் அனைவரும் விரும்பவேண்டிய திருஅவை.

உயிர்த்த கிறிஸ்துவே நமது எதிர்காலம்

அன்பான சகோதரர் சகோதரிகளே, உயிர்த்த கிறிஸ்துவே நமது எதிர்காலம், ஏனெனில், அனைத்து வரலாற்றையும் வழிநடத்துபவர் அவரே. இங்கு நிகழ்ந்த கம்யூனிஸ துன்புறுத்தலின் போது மறைச்சாட்சிகளாக இறந்த பல ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவுசபை அருள்சகோதரிகள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் கொண்டிருந்த இறைநம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருந்தனர். இவர்கள் அனைவரும்  ஹங்கேரி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்று பகர்கின்றனர்.

சிறந்த நம்பிக்கையாளர்களான நீங்கள், உங்கள் முன்னவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றி, உங்கள் நம்பிக்கையில் தளராமல் மகிழ்வுடன் முன்செல்ல உங்களுக்காக இறைவேண்டல் செய்கின்றேன். இறைவன் உங்களை அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 April 2023, 13:44