தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

ஹங்கேரியில் கத்தோலிக்கம் உயிர்த்துடிப்புடன் உள்ளது

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் ஹங்கேரிய நம்பிக்கையாளர்களின் மனநிலையையும் வாழ்க்கையையும் தொடர்ந்து வடிவமைக்க உதவும்: பேராயர் Michael Wallace Banach.

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

ஹங்கேரியில் கத்தோலிக்கம் உயிர்த்துடிப்பையும். வலுவான வழிபாட்டு முறையையும் கொண்டுள்ள  அதேவேளையில், மிகப்பரந்த சமூகத் தொடர்புகளையும் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார் அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Michael Wallace Banach.

ஏப்ரல் 28 முதல் 30 வரை ஹங்கேரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 41-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் வேளை, அது குறித்து வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள பேராயர் Michael Wallace Banach, அந்நாட்டு மக்கள் திருத்தந்தைமீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹங்கேரி மக்கள் திருத்தந்தையின் மகிழ்ச்சியையும் நேர்மையையும் அதிகம் விரும்புகிறார்கள் என்றும், 52-வது அனைத்துலக நற்கருணை மாநாட்டின் நிறைவுப் பெருவிழாவிற்காக, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதியன்று புடாபெஸ்டில் அவர் தங்கியிருந்தபோது, அவர்களைச் சந்திக்க மீண்டும் வருவதாக அவர் அளித்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியிருப்பதற்காக பாராட்டுவதாகவும் கூறியுள்ளார் பேராயர் Michael Wallace

குறிப்பாக, மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் உயிர்த்துடிப்பான கத்தோலிக்கம் பற்றியும், அதன் சவால்கள் மற்றும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருளான 'கிறிஸ்து எங்கள் எதிர்காலம்' (Christ is our future),  ஹங்கேரிய நம்பிக்கையாளர்களின் மனநிலையையும் வாழ்க்கையையும் தொடர்ந்து வடிவமைக்க முடியும் என்ற அவரது தனிப்பட்ட நம்பிக்கை ஆகியவைக் குறித்தும் இந்த நேர்காணலின்போது விரிவாக விவரித்துள்ளார் பேராயர் Michael Wallace.

உக்ரைனில் நிகழ்ந்து வரும் போர் ஹங்கேரியின் வடகிழக்கு எல்லையில் நடைபெறுவதால், இரஷ்யாவின் தாக்குதலுக்குப் பின்னர், உதவிபெறுவதற்காக உக்ரேனிய புலம்பெயர்ந்தோர் பெருமளவில் அந்நாட்டிற்குள் வந்துள்ளது பற்றியும், அம்மக்களின் தற்போதைய வாழ்வுநிலை குறித்தும் இந்நேர்காணலில் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Michael Wallace.

அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் Michael Wallace Banach அவர்கள், 1994-ஆம் ஆண்டிலிருந்து திருப்பீடத்தின் தூதரக அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். 2022-ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றி வருகிறார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பிரதிநிதியாகவும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளுக்குத் திருப்பீடத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 April 2023, 14:44