தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

பெண் தலைமைத்துவத்திற்கான முன்னோடி அருளாளர் Armida Barelli

1952ம் ஆண்டு மரணமடைந்து திருஅவையில் அருளாளராக அறிவிக்கப்பட்ட Armida Barelli அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மறைப்பணி அமைப்பு, இன்று 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,200 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவை மற்றும் சமூகத் துறைகளில் பெண் தலைமைத்துவத்தின் ஒரு வலிமையான முன்னோடியாக அருளாளர் Armida Barelli அவர்கள் திகழ்கின்றார் என்றும், ஒருங்கிணைந்த மாதிரியின் தேவையான திறமை மற்றும் செயல்திறன் கொண்டு செயல்பட்டவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22 சனிக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த இத்தாலியின் திருஇருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், இத்தாலிய கத்தோலிக்க நடவடிக்கை அமைப்புகள் மற்றும் கிறிஸ்துவின் அரசுரிமை மறைப்பணியாளர்கள் என்ற துறவுவாழ்வு சாரா அமைப்பினர் ஏறக்குறைய 12,000 பேரை சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

1882ம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் பிறந்து, திருமணம் புரியாமல், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரிடையேப் பணியாற்றி, கிறிஸ்துவின் அரசுரிமை மறைப்பணியாளர்கள் என்ற துறவுவாழ்வு சாரா அமைப்பு ஒன்றை உருவாக்க உதவிய Armida Barelli அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்டதன் முதலாண்டில் அதற்கு நன்றியாக திருத்தந்தையை இம்மக்கள் சந்தித்தனர்.

திருத்தந்தை வத்திக்கான் வளாகத்தில்.
திருத்தந்தை வத்திக்கான் வளாகத்தில்.

Armida Barelli ஒரு சிறந்த பெண்மணி, மறைப்பணியாளர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உறவுகளின் வலிமையான வலையமைப்பை இத்தாலியில் வெகுதூரம் பயணம் செய்து உருவாக்கியவர், அனைவருடனும் நல்ல உறவில் இருந்தவர் என்பது அவரது ஏராளமான மற்றும் உணர்ச்சிமிக்க கடிதங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

செவிமடுத்தல், பரஸ்பர உரையாடல் மேற்கொள்ளல், ஒருங்கிணைக்கும் திறன், வலைப்பின்னல் அமைப்புடன் உறவுகளை வளர்த்தல், போன்ற தனிச்சிறப்பு கொண்டு திகழ்ந்தவர், கடவுளின் அரசு எல்லா இடங்களிலும் வளர்ந்து பயனளிக்க உதவியவர் அருளாளர் Barelli என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து, பணிவுடனும், படைப்பாற்றலுடனும் தங்களையே அர்ப்பணித்து, இறைவன் எவ்வாறு பெரிய காரியங்களை நம்மில் செய்கிறார் என்பதைக் கண்டறிய அருளாளரின் வாழ்வு நமக்கு உதவுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருளாளரின் வாழ்க்கை வரலாறானது, கொடியின் கிளையைப் போல இறைவனுடன் இணைந்திருக்க அவர் செய்த மிகுந்த விடாமுயற்சி, இந்த அனுபவத்தை பலருடன் பகிர்ந்து கொள்வதற்கான அவரது விருப்பம் போன்றவற்றை எடுத்துரைக்கின்றது  என்றும் கூறினார்.

மக்கள் நடுவில் திருத்தந்தை
மக்கள் நடுவில் திருத்தந்தை

பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல், பள்ளி, அலுவலகம் ஆகியவற்றில், சிறியவர்கள், நலிவடைந்தவர்கள் மற்றும் ஏழைகள் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி, அமைதி மற்றும் நீதியைப் பின்பற்றி, அனைவருடனும் ஒன்றிணைந்து நடப்பதற்கான வழிகளைத் தேட அவர்களை ஊக்கமூட்டுவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அளவின்றி அன்பு செய்வது, கடவுளின் அன்பால் நாம் மீண்டும் உருவாக்கப்பட உதவுகிறது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது மக்களின் வாழ்க்கையை உறுதியான மற்றும் நம்பகமான முறையில் மாற்றி, மக்கள் வழியாக சமூக புதுப்பித்தலின் பாதைகள் மற்றும்  செயல்முறைகளை உருவாக்குகின்றது என்றும் கூறினார்.

ஆன்மிகத்தின் புதுப்பிக்கப்பட்ட கவனிப்பின் தேவை, உருவாக்கம் மற்றும் இளம் பெண்கள் அர்ப்பணிப்புக்கான அழைப்பு பற்றி சிந்திப்போம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்தாலியில் ஒரு கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் கல்வி, சவால் மற்றும் கனவு, உலகளாவிய தன்மையின் உறுதியிலிருந்து உலகின் பேரார்வம் வரை கிறிஸ்துவின் செய்தியைப் பற்றியும் சிந்திக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

1952ம் ஆண்டு மரணமடைந்து திருஅவையில் அருளாளராக அறிவிக்கப்பட்ட Armida Barelli அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மறைப்பணி அமைப்பு, இன்று 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,200 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2023, 12:57