சான்மரினோ தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இத்தாலிக்குள்ளேயே தன் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் சிறிய நாடான சான் மரினோவின் இரு ஆட்சியாளர்களை இத்திங்கள், மார்ச் 20 அன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சான் மரினோ நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களான Maria Luisa Berti மற்றும் Manuel Ciavatta ஆகியோர் திருத்தந்தையை சந்தித்தபின், திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும் நாடுகளுடன் ஆன உறவுகளுக்கானத் துறையின் நேரடிச் செயலர், அருள்பணி Mirosław Wachowski ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்புகளில், உக்ரைன் மோதல், ஐரோப்பாவுடன் உறவு, குடியேற்றதாரர், இரு நாடுகளிடையே உறவை மேம்படுத்தல் போன்றவை விவாதிக்கப்பட்டதாக திருப்பீட தகவல் துறை அறிவிக்கிறது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நற்குணங்களைக் கொண்டு, அனைவருக்காகவும் பரிந்துரைப்பவராக புனித யோசேப்பு இருந்தாலும், பலவேளைகளில் மற்றவர்களால் கண்டுகொள்ளப்படாதவராக அவர் இருக்கிறார் என மார்ச் 20, திங்கள்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.
மார்ச் 19, புனித யோசேப்பின் திருவிழா இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை வந்ததையொட்டி, வத்திக்கானில் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட புனித யோசேப்பின் திருவிழாவையொட்டி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், பலரால் கண்டுகொள்ளப்படாத ஒருவரை, அவரின் தினசரி இருப்பு மறைக்கப்பட்டதாக, அதேவேளை பரிந்துரையாளராக, ஆதரவாளராக, துன்பவேளைகளில் வழிகாட்டியாக இருக்கும் ஒருவரை, நாம் புனித யோசேப்பில் கண்டுகொள்கிறோம் என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்