தேடுதல்

போலந்து நிலக்கரி சுரங்கத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ். போலந்து நிலக்கரி சுரங்கத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருடன் திருத்தந்தை பிரான்சிஸ்.  (Vatican Media)

துன்ப இருளில் இறைவன் நம் அருகில் – திருத்தந்தை

ஏன் இந்த துன்பம் எனக்கு மட்டும் என்ற கேள்விக்கு துன்பஇருளில் ஆண்டவர் நம் அருகில் இருக்கின்றார் என்பதே பதிலாகும். - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உறவுகளை இழந்து வாடும் துன்பமான நேரங்களில் இறைவன் நம் செபத்தைக் கேட்கவில்லை என்று தோன்றினாலும், துன்ப இருளில் அவர் நம் அருகில் இருக்கின்றார் என்பதை இறைவனின் அமைதி நமக்கு வெளிப்படுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 மற்றும் 23 ஆகிய நாள்களில் போலந்து நிலக்கரி சுரங்கத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தார் ஏறக்குறைய 80 பேரை மார்ச் 24 வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்த போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிலக்கரி சுரங்க விபத்தில் கணவன், தந்தை, மகன் போன்றோரை இழப்பது மிகவும் கொடுமையானது என்றும், வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத இத்தகைய துயரத்திற்கு இதயப்பூர்வமான நெருக்கத்துடன் செபிப்பதன் வழியாக பதில் கூற விரும்புகிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மிகவும் கடினமான மற்றும் துன்பமான இச்சூழ்நிலையில், இரக்கம் நிறைந்த அமைதி மிகவும் வலிமையானது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இத்தகைய தருணங்களில் நமது செபத்தைக் கடவுள் கேட்கவில்லை என்று தோன்றினாலும் இறந்தவர்களின் அமைதியும், கடவுளின் அமைதியும் அவர் நம் அருகில் இருக்கின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

சில நேரங்களில் நமக்கு இவ்வமைதி கோபத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அந்த கோபமும் செபமே என்பதை உணரவேண்டும் என்றும், ஏன் இந்த துன்பம் எனக்கு மட்டும் என்ற கேள்விக்கு துன்பஇருளில் ஆண்டவர் நம் அருகில் இருக்கின்றார் என்பதே பதிலாகும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தார் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ஆசீர் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2023, 11:59