தேடுதல்

சாந்தா மரியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மரியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

கலை, தூய ஆவியாரின் படைப்பாற்றலிலிருந்து செயல்படவேண்டும்

உடல் மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் குறியீட்டு மதிப்பைப் புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டதால், அது, வழிபாட்டு முறையின் குறியீட்டு மொழியை நவீன மனநிலைக்கு அணுக முடியாததாக மாற்றுகிறது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித கட்டிடக்கலை என்பது குறியீட்டு மொழியை மீண்டும் கண்டுபிடிக்க முயல வேண்டும் என்றும், அதை விளக்கிக் கூற முயலவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 14, இச்செவ்வாயன்று நடைபெற்ற திருப்பீடக் கல்விக்கழகத்தின் 26-வது பொது அமர்விற்கு வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் வழிபாட்டு முறையிலிருந்து உத்வேகம் பெறும் புனித இடங்களை வடிவமைக்குமாறும் கட்டிடக் கலைஞர்களை வலியுறுத்தியுள்ளார்.

கட்டிடக்கலை என்பது உடல் மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் குறியீட்டு மதிப்பைப் புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிட்டதால், அது, வழிபாட்டு முறையின் குறியீட்டு மொழியை நவீன மனநிலைக்கு அணுக முடியாததாக மாற்றுகிறது  என்று Desiderio desideravi அதாவது, 'மிக மிக ஆவலாய் இருந்தேன்' (லூக் 22:15) என்று இரவு விருந்தின்போது இயேசு கூறிய வார்த்தைகளை மையப்படுத்தி 2022-ஆம் ஆண்டு தான் எழுதிய திருமடலிலிருந்து மேற்கோள்காட்டிக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கலை மற்றும் கட்டிடக்கலை படைப்பாற்றல், திருஅவையின் வழிபாட்டு வாழ்க்கை மற்றும் தூய ஆவியாரின்  செயல் ஆகியவற்றிலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று எடுத்திக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபாட்டு முறையும், அவ்வழிபாட்டு இடத்தைச் சுற்றியுள்ள கலையும் 'அகநிலைவாதங்கள்' மற்றும் 'கலாச்சார கூறுகளின் படையெடுப்பு' ஆகியவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியில், ஆராய்ச்சி மற்றும் சேவைத் துறைகளில் பலனளிக்கும் முயற்சிகளுக்காக, திருப்பீடக் கல்விக்கழகத்திற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கல்விக் கழகத்தின் உறுப்பினர்களை புதிய உடன்படிக்கையின் பேழையும் ஆலயமுமான அன்னை மரியாவிடம் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2023, 13:12