தேடுதல்

தென்சூடான் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.45 மணிக்கு உரோம் பியுமிச்சினோ விமான நிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

மெரினா ராஜ் - வத்திக்கான்

பிப்ரவரி 5ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் முற்பகல் 11.00 மணிக்கு ஜூபாவில் உள்ள திருப்பீடத்தூதரகத்தார்க்கு தனது நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அங்கிருந்து 2.4 கிமீட்டர் தூரம் காரில் பயணித்து ஜான் கராங்க் பகுதியில் திருப்பலி நிறைவேற்ற சென்றார். உள்ளூர் நேரம் 8.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் முற்பகல் 11,45 மணிக்கு ஜான் கராங்க் கல்லறைத்தோட்டப் பகுதியை வந்தடைந்த திருத்தந்தை கூடியிருந்த  ஏறக்குறைய 70000 மக்களைக் காண திறந்த காரில் பயணம் செய்து அவர்களிடையே வலம் வந்தார்.  அதன்பின் உள்ளூர் நேரம் 8.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 12,15 மணிக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆங்கில மொழியில் நடைபெற்ற இத்திருப்பலியில் அரபு, மற்றும் ஆங்கிலத்தில் வாசகங்கள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியத்தில் வழங்கிய மறையுரையானது மக்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. திருத்தந்தையின் மறையுரையைத்தொடர்ந்து arabo, dinka, bari, nuer, zande என்னும் உள்ளூர் மொழிகளில்  நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் எடுத்துரைக்கப்பட்டன. ஜூபா உயர்மறைமாவட்டப் பேராயர், Stephen Ameyu Martin Mulla,அவர்கள் திருப்பலியினைத் தொடர்ந்து வழிநடத்தி இறுதியில் திருத்தந்தைக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.  திருப்பலியின் முடிவில் கூடியிருந்த மக்களுக்கு  நன்றியினையும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பலியில் நடனமாடிய மக்கள்
திருப்பலியில் நடனமாடிய மக்கள்

கடவுளின் அருளால் தான் அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் நம்பிக்கையாக மாற்றிய புனித ஜோசப்பின் பகிதா வைப்போல நம்பிக்கை என்பது பகிர்ந்து கொள்ளப்படும் பரிசாக, பழங்கள் தரும் விதையாக நம் நடுவில் செழிக்க வாழ்த்துகிறேன் என்றும், நம்பிக்கையின் அடையாளமாக உள்ள நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும் தான் நன்றி கூறி ஆசீர்வழங்குவதாகவும் எடுத்துரைத்தார். மேலும் பேராயர் ஜஸ்டின், ஒருங்கிணைப்பாளர் கிரீன்சீல்டு ஆகியோர்க்கு நன்றி தெரிவித்து நாட்டின் சூழலை அமைதிக்கான படிகளாக மாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் கூறினார். நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதையை அன்னை மரியாவிடம் ஒப்படைத்த திருத்தந்தை, சுரண்டல், வறுமை, உக்ரைன் போர் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படும் பல நாடுகளில் அமைதியைத் தர அன்னை மரியாவிடம் அருள்வேண்டுவோம் என்றும் எடுத்துரைத்தார்.

பின் அங்கிருந்து 7 கிமீட்டர் தூரம் காரில் பயணித்து ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் 10.45 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடைந்தார்.  இத்துடன் தென்சூடான் மூன்றாம் நாள் பயண நிகழ்வினை  நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தென்சூடான் அரசுத்தலைவர், சால்வா கீர் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள், ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் Dr Greenshields, Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby, ஆகியோரை விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர்கள் பகுதியில் சந்தித்து மகிழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரச மரியாதையுடன்– A359 என்னும் இத்தாலிய விமானத்தில் வழியனுப்பி வைக்கப்பட்டார். 4.945 கிமீட்டர் தூரத்தை  6 மணி நேரம் 45 நிமிடங்கள் கடந்து உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.45 மணிக்கு உரோம் பியுமிச்சினோ விமான நிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2023, 14:46