தேடுதல்

கிறிஸ்துவை தேர்வு செய்பவர்கள் அமைதியை தேர்வு செய்கின்றனர்

சகோதர ஒற்றுமையை வளர்த்து, இயேசுவின் வன்முறையற்ற வழியைப் பரவச்செய்வதன் வழியாக சமுதாயத்தில் அமைதியின் செய்தியைக் கொண்டு வர உதவுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 4, இச்சனியன்று, தென்சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள John Garang கல்லறைத் தோட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்புசார் இறைவேண்டல் கூட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, வன்முறையால் சிதைக்கப்பட்ட இந்த அன்பான நிலத்திலிருந்து, பல செபங்கள் இப்போது விண்ணிற்கு எழுப்பப்பட்டுள்ளன. நன்மைக்காக உழைக்கவும், நமது பயணத்தில் விடாமுயற்சியுடன் இருக்கத் தேவையான வலிமையைக் கண்டறியவும், கிறிஸ்தவர்களாக நாம் செய்ய வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான காரியம் செபம். ஆகவே, செபிக்க, பணியாற்ற, மற்றும் பயணிக்க என்ற மூன்று வினைச்சொற்களைப் பற்றி இப்போது சிந்திப்போம்.

முதலாவது செபிக்க

மனித வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் அமைதிக்கான கிறிஸ்தவ சமூகங்களின் பெரும் அர்ப்பணிப்பு செபம் இல்லாமல் பலனளிக்காது. உண்மையில் அமைதியின் இளவரசராகிய இயேசுவின் துணையின்றி நம்மால் அமைதியை வளர்க்க முடியாது. நேற்றைய நாளில், நான் மோசே குறித்து பேசியபோது அவர் செபத்தின் வல்லமை கொண்டே இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலையளித்தார் என்று கூறினேன். அதனை இப்போது நினைவு படுத்த விரும்புகின்றேன்.

செங்கடல் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு அதன் கரையிலிருந்த இஸ்ரயேல் மக்கள் அச்சத்தின் பிடியில் இருந்தனர் காரணம், பாரவோனும் அவனது படைகளும் அவர்களை மீண்டும் துரத்திக்கொண்டு வந்தனர். தாங்கள் இறப்பைச் சந்திக்கப் போகின்றோம் என்று எண்ணிக்கொண்டிருந்த மக்களுக்கு “அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள் (காண்க விப 14:13) என்ற வார்த்தைகளைக் கூறி மோசே அவர்களைத் திடப்படுத்தினார். செபத்தின் வழியாக, அவர் கடவுள்மீது கொண்டிருந்த ஒன்றித்தலின் காரணமாக இஸ்ரயேல் மக்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

அவ்வாறே நாமும் வாழ்வில் முன்னோக்கிச் செல்லவும், நம் அச்சங்களைப் போக்கவும், இருளின் பிடியிலும் நமக்காகக் கடவுள் தயார் செய்துகொண்டிருக்கும் மீட்பைக் காணவும் நமக்குத் வலிமையைத் தருகிறது செபம். அனைத்திற்கும் மேலாக, செபம் கடவுளின் மீட்பை மக்களுக்குக் கொண்டு வருகிறது. சகோதரர் சகோதரிகளே, இந்த வழியில் நாம் ஒருவரை ஒருவர் ஆதரிப்போம். ஒரே குடும்பமாக இணைந்து அனைவருக்காகவும் செபிப்பதில் நமக்கு இருக்க வேண்டிய கடமையை உணர்வோம்.

இரண்டாவதாகப் பணியாற்ற

நாம் அமைதியை ஏற்படுத்துபவராக இருக்கவேண்டுமென இயேசு விரும்புகின்றார் (காண்க மத் 5:9). அவருடைய திருஅவை கடவுளுடன் நெருங்கிய ஒன்றிப்பின் அடையாளமாகவும் கருவியாகவும் மட்டுமல்லாமல், முழு மனித குடும்பத்தின் ஒற்றுமைக்கான அடையாளமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். புனித பவுலடியாரும், கிறிஸ்துதான் நமது அமைதி, ஏனென்றால், அவர்தான் ஒற்றுமையை மீட்டெடுக்கின்றார். இதைத்தான் கிறிஸ்துவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (காண்க எபே 2:14) என்கின்றார்.

ஆகவே, அன்பான சகோதரர் சகோதரிகளே, பன்முகத்தன்மையை ஒருங்கிணைத்து, பன்மையில் ஒற்றுமையை வளர்க்கும் அமைதியைக் கட்டியெழுப்புமாறு இயேசு மற்றும் இறைத்தந்தையின் ஆவியானவர் நம்மைத் தூண்டும் அமைதிக்காக அயராது உழைப்போம்.

கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் யார் பக்கம் நிற்பது என்பதைத் தேர்வுசெய்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவைத் தேர்வுசெய்து கொள்பவர்கள் எப்போதும் அமைதியைத் தேர்வுசெய்துகொள்கின்றனர். போரையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுபவர்கள் இறைவனைக் காட்டிக் கொடுத்து அவருடைய நற்செய்தியை மறுக்கின்றனர்.

இயேசுவின் அன்பு எல்லாருக்கும் உரியது. 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!' (காண்க யோவா 17:21) என்பது நம்பிக்கைகொண்டுள்ள நமக்கெல்லாம் இயேசுவின் இருதயப்பூர்வமான செபம். சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்தவர்களாகிய நமக்குள் இந்தச் சகோதர ஒற்றுமையை வளர்த்து, இயேசுவின் வன்முறையற்ற வழியைப் பரப்பவச் செய்வதன் வழியாக சமுதாயத்தில் அமைதியின் செய்தியைக் கொண்டு வர உதவுவோம்.

மூன்றாவதாக பயணிக்க

இந்த நாட்டில், கிறிஸ்தவ சமூகங்கள் ஒப்புரவின் வழிகளை ஊக்குவிப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன என்பதைக் குறித்து பெரிதும் மகிழ்கின்றேன். பெரிய மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியில், கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்கள் மக்களை ஒருபோதும் பிரித்துவிடாமல், அவர்கள் ஒன்றித்திருப்பத்திற்கு ஒரு காரணியாக இருந்து வருகிறார்கள் என்பது ஒரு அழகான விடயம்.

உங்கள் பயணத்தில் விடாமுயற்சியுடன் இருக்க உதவும் இரண்டு முக்கிய வார்த்தைகளை இங்கே பரிந்துரைக்க விரும்புகிறேன். அவைகள் நினைவு மற்றும் அர்ப்பணிப்பு.

முதலாவதாக நினைவு

நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழிகளைப்  பின்பற்றுகின்றன. ஆகவே, அவர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்ற முடியுமா என்று அச்சம்கொள்ள வேண்டாம். ஆனால் உங்களுக்காக இந்த வழிகளைத் தயார் செய்தவர்களால் நீங்கள் தூண்டப்படுவதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒரு தொடர் ஓட்டத்தைப் போலவே, அவர்களின் சாட்சிய வாழ்வைப் பற்றிக்கொண்டு, நீங்கள் முழுமையான மற்றும் ஒற்றுமையின் இலக்கை நோக்கி ஓடும்போது அதை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவதாக அர்ப்பணிப்பு

அன்பு என்பது உறுதியானதாக இருக்கும் போது, ​​ஒதுக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உரிமையற்றவர்களின் தேவைக்காகக் குரல்கொடுத்து முழு அர்ப்பணிப்புடன் நாம் ஒன்றிப்பை நோக்கிப் பயணிக்கிறோம். ஆகவே, இயேசுவின் அமைதிக்கான சாட்சிகளாக, இணைப்பாளர்களாக இணைந்து பணியாற்றுவதன் வழியாகவும், நமது பணிகள் மற்றும் ஒற்றுமையின் செயல்களால் ஒரே பயணத்தில் விடாமுயற்சியுடன் இணைந்து செல்வதன் வழியாகவும், ஒருவருக்கொருவர் செபிப்பதன் வழியாகவும் ஒவ்வொரு நாளும் ஒன்றிணைத்து பயணிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 February 2023, 14:01