தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - நல்ல ஆயன் இயேசு போல வாழ

துன்பம் மற்றும் இடர்ப்பாடுகளை நம்மீது கொண்ட அன்பினால் சந்தித்த நல்ல ஆயன் இயேசு போன்று, நாமும் அப்போஸ்தலிக்க பேரார்வத்திற்காக துன்பத்தையும் இடர்ப்பாடுகளையும் ஏற்றுவாழ முயற்சிப்போம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நல்ல ஆயன் இயேசு போல துன்பத்தையும் இடர்ப்பாடுகளையும் துணிவுடன் ஏற்று அப்போஸ்தலிக்கப் பேரார்வத்துடன் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தி சனவரி 18 புதன்கிழமை வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த மக்களுக்குத் தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். லூக்கா நற்செய்தி பிரிவு 15 இல் உள்ள நான்கு முதல் ஏழு வரையிலான இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரையை தொடர்ந்தார் திருத்தந்தை.

லூக்கா 15: 4-7

“உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில், காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

திருத்தந்தையின் புதன் பொதுமறைக்கல்வியுரை

 

அன்பான சகோதர சகோதரிகளே அப்போஸ்தலிக்கப் பேரார்வத்தை பின்பற்றவேண்டும் என்ற ஆவலுடமும் நற்செய்தியின் மகிழ்ச்சியை பிறருக்கு எடுத்துரைக்கும் எண்ணத்துடன் இருக்கும் நாம் இன்றைய பொதுமறைக்கல்வியில், இயேசுவின், மாதிரியையும்,  அடிப்படை ஆதாரத்தையும் காணலாம்.  விண்ணகக் கடவுளின் நித்திய வார்த்தையால், நமது மீட்பிற்காக தன் உடலையும் வாழ்க்கையையும் நமக்காக அளித்தார் இயேசு. விண்ணகத் தந்தையுடன் அவர் கொண்டிருந்த உறவை அடிப்படை ஆதாரமான ஆழமான செபத்தின் வழியாக வெளிப்படுத்தி ஏழைகள், பாவிகள் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் வாழ்ந்தார். விண்ணரசின் வருகையை குணப்படுத்துதல், நல்லிணக்கம், மன்னிப்பு போன்றவற்றின் வழியாக எடுத்துரைத்தார். ஒரு நல்ல மேய்ப்பராக, திருஅவையின் அனைத்து மேய்ப்பர்களுக்கும் முன்மாதிரிகையாக இருந்து, தனது மந்தையின் நலனுக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து, காணாமல் போன ஆடுகளைத் தேடிக் கண்டடைந்துப் பாதுகாத்தார். அவருடைய முன்மாதிரிகையைப் பின்பற்றி, நமது அன்றாட வாழ்வில், ஜெபத்தில் தந்தையுடன் இணைந்திருப்பதன் வழியாக மகிழ்ச்சியையும் பலத்தையும் பெற முயற்சிப்போம். கடவுளுடைய வார்த்தையில் விளங்கும் இத்தகைய  அப்போஸ்தலிக்க பேரார்வத்தால் நம் இதயங்களை வடிவமைக்க அனுமதிப்போம். மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் புதிய வாழ்வின் செய்தியை நம்முடைய வார்த்தைகளினாலும் செயல்களினாலும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோம்.

தந்தை கடவுளின் வார்த்தையாக இம்மண்ணில் பிறந்த இயேசு, அவ்வார்த்தையை வாழ்க்கையாக்கினார். அவர் தந்தையுடன் இணைந்திருந்ததை நற்செய்தியில், அதிகாலை எழுந்து தனியே சென்று செபித்தார் என்றும், முக்கியமான புதுமைகளையும் அற்புதங்களையும் செபித்ததற்கு பின்பே செய்தார் என்றும் நாம் வாசிக்கக் கேட்கின்றோம். இத்தகைய உறவு நிலையில் தூயஆவியின் துணையுடன் தந்தையோடு இணைந்து மனிதனாக இருப்பதன் அர்த்தத்தையும், உலகில் இருப்பதற்கான அர்த்தத்தையும் நமக்கு எடுத்துரைத்தார் இயேசு. நாசரேத் என்னும் ஊரில் மறைந்த வாழ்வு வாழ்ந்த இயேசு, யோவானிடம் வந்து திருமுழுக்கு பெற்றதன் வழியாக உலகில் தனது பணிக்கான திறவுகோலை  நமக்கு அளித்தார். பாவிகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து பகிர்ந்து வாழ்ந்த இயேசு பணிவிடை பெற அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்பதைத் தன் வாழ்வாலும் வார்த்தையாலும் எடுத்துரைத்தார். 

ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோருடன் திருத்தந்தை
ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோருடன் திருத்தந்தை

நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரையேக் கொடுப்பார்

மேய்ப்பனாக இருப்பது என்பது அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும் ஒரு வேலை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கை முறை. நாள் முழுவதும் மந்தையுடன் இருத்தல் மேய்ச்சலுக்குத் துணையாக செல்லுதல், அவைகளுடனே உண்ணுதல் உறங்குதல், பலவீனமான ஆடுகளைக் கவனித்தல் என்பன போன்ற ஒரு வாழ்க்கை முறை. இத்தகைய வாழ்க்கை முறையை வாழ்ந்து நமக்காக தன் உயிரைக் கொடுத்த ஆயன் இதயம் கொண்டவர் இயேசு. நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரையேக் கொடுப்பார் என்ற இயேசு நமக்காக தன்னையேக் கொடுத்தார். என்னைப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற இயேசுவின் வார்த்தையை நினைவில் கொண்டு நல்ல ஆயன் இதயம் கொண்டு செயல்படுவோம். அப்போஸ்தலிக்க பேரார்வத்தை பின்பற்ற விரும்பும் நாம் லூக்கா நற்செய்தியின் 15ஆம் பிரிவில் உள்ள காணாமற்போன ஆடுகளின் உவமை, காணாமற்போன நாணயம் மற்றும் ஊதாரி மைந்தன் பற்றி எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். கடவுள் தம்முடைய ஆடுகளை அடைத்து வைக்கவோ, வெளியேறாதபடி அவற்றை அச்சுறுத்தவோ, வெளியே சென்று தொலைந்து போனால், அவர் அதைக் கைவிடவோ இல்லை, மாறாக அதைத் தேடுகிறார். பாதுகாப்பாக இருக்கும் தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு, காணாமல் போன ஒரே ஓர் ஆட்டிற்காக வெளியே செல்கிறார். ஆபத்தானதும் பகுத்தறிவிற்கு எதிரானதுமான இச்செயலைசெய்து எல்லா ஆடுகளையும் அன்பு செய்யும் சிறந்த ஆயனாகத் திகழ்கின்றார். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மக்களையும் இவ்வாறே தேடி செல்கின்றார். கோபமோ வெறுப்போ அல்ல, மாறாக தவிர்க்க முடியாத ஏக்கத்துடன் தேடிச் செல்கின்றார்.

இதுவே அப்போஸ்தலிக்க பேரார்வம். இத்தகைய மனநிலை நம்மிடம் உள்ளதா, நமது இதயம் ஆயனுக்குரிய இதயத்துடன் ஒத்துப் போகின்றதா என்று சிந்தித்துப் பார்ப்போம். மந்தையை விட்டு வெளியேறியவர்களை எதிரிகளாக பார்க்காது, பள்ளி, பணித்தளம், நகரம், மற்றும் தெருக்களில் அவர்களைச் சந்திக்கும்போது, ​​அவர்களை அன்பு செய்து, ஒருபோதும் மறக்காத தந்தையின் மகிழ்ச்சியை அவர்கள் காண, நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நாம் நினைப்போம். துன்பம் மற்றும் இடர்ப்பாடுகளை நம்மீது கொண்ட அன்பினால் சந்தித்த இயேசு போன்று, நாமும் அப்போஸ்தலிக்க பேரார்வத்திற்காக துன்பத்தையும் இடர்ப்பாடுகளையும் ஏற்றுவாழ முயற்சிப்போம். அவரது மாதிரிகையையும், அடிப்படை வாழ்வாதாரத்தையும் நமதாக்க முயல்வோம். பிறரும் நம்மில் ஒருவராக கடவுளின் மகிழ்ச்சியான பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரையும் அன்பு செய்வோம்.  நல்ல ஆயனின் உள்ளத்துடன் செயல்பட இறைவனின் அருளை வேண்டுவோம்.

இவ்வாறாக தன்னுடைய புதன் பொது மறைக்கல்வியுரையை  நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும் இன்றைய பார்வையாளர்களில் ஆங்கிலம் பேசும் திருப்பயணிகள், குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த குழுக்களையும் பல மாணவர் குழுக்களையும் அன்புடன் வாழ்த்தினார். வடக்கு நைஜீரியாவில் உள்ள மின்னா மறைமாவட்ட ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அருள்பணி ஐசக் ஆச்சி அவரின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெறவும், துன்புறும் கிறிஸ்தவ மக்களுக்காகவும் செபிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 January 2023, 11:00