தேடுதல்

காங்கோ நாட்டுச் சிறுவன் இரணுவ வீரருடன்  காங்கோ நாட்டுச் சிறுவன் இரணுவ வீரருடன்   (AFP or licensors)

காங்கோ நாட்டிற்காக இறைவேண்டல் செய்வோம் : திருத்தந்தை

ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகரும் வண்ணம், துன்பங்களையும் பேராபத்துக்களையும் மேற்கொள்ளும் நமக்கு, மேய்ப்புப்பணி சார் இதயத்தைத் தந்தருளுமாறு கடவுளிடம் வேண்டுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்து வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டும், அங்குத் தான் மேற்கொள்ளவிருக்கும் அமைதிக்கான திருத்தூதுப் பயணத்தை நினைவிற்கொண்டும் அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்ய திருப்பயணிகளிடம் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 18, இப்புதனன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் தான் வழங்கிய புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு, காங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் குழு ஒன்றைச் சந்தித்தபோது இவ்வாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 31-ஆம் தேதி முதல் முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை, தென்சூடானின் ஜூபாவிற்கும் அமைதிக்கான தனது திருத்தூதுப் பயணத்தை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்ய வேண்டுமென திருப்பயணிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகரும் வண்ணம், துன்பங்களையும் பேராபத்துக்களையும் மேற்கொள்ளும் நமக்கு மேய்ப்புப்பணி சார் இதயத்தைத் தந்தருளுமாறு கடவுளிடம் வேண்டுவோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கும், நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறவர்களுக்கும் கடவுளுடைய வார்த்தையைக் கொண்டு செல்வது ஒரு பெருமைக்குரிய காரியம் மட்டுமல்ல, கடமையும் கூட என்பதை உணர்வோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

ஜனவரி 15, இஞ்ஞாயிறன்று, காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு நகரிலுள்ள Kasindi என்னுமிடத்தில் ISIS அமைப்புடன் தொடர்புடைய AFP அமைப்பின் தீவிரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டும், 40-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதுகுறித்த இரங்கல் செய்தி ஒன்றை  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2023, 13:53