தேடுதல்

இஸ்ரயேல் பாலஸ்தீன் இடிபாடுகள் பகுதிகளைப் பார்வையிடும் மனிதர்.   இஸ்ரயேல் பாலஸ்தீன் இடிபாடுகள் பகுதிகளைப் பார்வையிடும் மனிதர்.   (AFP or licensors)

யெருசலேம், உக்ரைன் மற்றும் கௌகாசுஸ் பகுதிக்காக செப வேண்டல்

அமைதிக்கான உண்மையான தேடலில் பேச்சுவார்த்தையுடன் கூடிய முயற்சிகளுக்கு அனைத்து அரசுகளும் உதவ வேண்டும் – திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்ராயேல் துருப்புகளுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வந்து புனிதபூமியில் அமைதியும் , உடனடித் தீர்வும் காணப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 29ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கியபின், இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு துவக்கத்திலிருந்து எண்ணற்ற பாலஸ்தீனியர் இஸ்ராயேல் துருப்புகளுடனான மோதலில் கொல்லப்பட்டது குறித்த ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.

பாலஸ்தீனா மீது தீவிரவாதத்திற்கு எதிரான  தாக்குதலை இஸ்ரயேல் இராணுவம் நடத்தியபோது ஒரு பெண் உட்பட 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையும், யூத செபக்கூடத்திலிருந்து வெளிவந்த இஸ்ரயேலர்கள் மீது பாலஸ்தீனியர் ஒருவர் நடத்தியத் தாக்குதலில் 7 யூதர்கள் கொல்லப்பட்டதையும் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான உண்மையான தேடலில் பேச்சுவார்த்தையுடன் கூடிய முயற்சிகளுக்கு அனைத்து அரசுகளும் இதில் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், உக்ரைன் நாட்டு மக்களுக்காகவும், தென் கௌகாசுஸ் பகுதியிலுள்ள Lachin மோதல் இடத்தில் வாழ்ந்து வரும் அர்மீனிய மக்களுக்காகவும் செபிக்குமாறுக்கேட்டுக் கொண்டார் திருத்தந்தை. அர்மீனியாவுக்கும் அசர்பைஜானுக்கும் இடையே நிலத்தகராறு இடம்பெற்றுவரும் பகுதியாக Lachin இருந்து வருகிறது.

மேலும், ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின், ஜனவரி 29ஆம் தேதி சிறப்பிக்கப்பட்ட தொழுநோயாளர் விழிப்புணர்வு தினம் குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2023, 14:35