தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

விமர்சனங்கள் முகத்திற்கு முன் கூறப்படவேண்டும் :திருத்தந்தை

ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது என்பது ஒரு பாவம் அல்ல, ஆனால் அது மனித நிலையின் ஒரு பகுதி : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

விமர்சகர்கள் நாம் வளர உதவுகிறார்கள், ஆனால் அவர்கள் அதை என் முகத்திற்கு நேராகச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று Associated Press என்ற அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்

ஜனவரி 24, இச்செய்வாயன்று, நிகழ்ந்த இந்த நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், ஓரினச்சேர்க்கையாளர்களை மாண்புடன் நடத்துதல், சீனாவுடன் உரையாடல்,  ஜெர்மனியின் பயணிக்கும் தலத்திருஅவை, மற்றும், அருள்பணியாளர் Rupnik வழக்கு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்

மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு நேரிய மனிதர், அவரது மரணம் ஒரு தந்தையை இழந்ததுபோன்ற ஒரு உணர்வை எனக்குக் கொடுக்கிறது, அவர் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தார்,  எனக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் உடனடியாக அவரிடம்தான் ஓடிச்செல்வேன் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது அனுபவம்,  வருங்கால திருத்தந்தையர்களுக்கும் பதவிவிலகளைத் தேர்வு செய்ய அதிக சுதந்திரத்தை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

விமர்சனங்கள்

கர்தினால்கள் மத்தியில் புனைப்பெயர்களில் விநியோகிக்கப்படும் புத்தகங்கள் அல்லது ஆவணங்கள் வழியாக அவர் அண்மையில் பெற்ற விமர்சனங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பொறுத்தளவில், அனைவரையும் போல, ஒருவரது மன அமைதிக்காக அவர் விமர்சிக்கப்படாமல் இருப்பது நல்லது என்று கூறினார்.

மேலும், விமர்சனங்களை நான் விரும்புகிறேன், ஏனென்றால் அது பேச்சு சுதந்திரம். அதேவேளை, விமர்சனங்கள் என் முகத்திற்கு முன்னால் செய்யப்பட வேண்டும், ஏனென்றால், இந்த வழியில்தான் நாம் அனைவரும் வளர்க்கிறோம் என்றும், விமர்சனம் தவறான முறையில் கையாளப்படும்போது, அது மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓரினச்சேர்கை

ஓரினச்சேர்க்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது என்பது ஒரு பாவம் அல்ல, ஆனால் அது மனித நிலையின் ஒரு பகுதி என்று கூறினார்.

LGBT (lesbian, gay, bisexual, and transgender) என அடையாளப்படுத்தும் மக்களின் உரிமைகள் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள், கடவுள் நாம் இருப்பது போலவே இருக்க விரும்புகிறார் என்றும், நாம் ஒவ்வொருவரும் நமது மனித மாண்பிற்காகப் போராடும் வலிமையுடன் இருக்க வேண்டும் என்றும் விளக்கினார்.

ஓரினச்சேர்க்கை என்பது "ஒரு பாவம்" என்று பலர் கூறுகின்றனரே என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் பாவத்தையும் குற்றத்தையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும், “ஒருவருக்கொருவர் தொண்டு செய்யாமல் இருப்பதும் பாவம்தான் என்றும் எடுத்துரைத்தார்.

அருள்பணியாளர் Rupnik

30 ஆண்டுகளுக்கு முன்பு பாலின முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிரபல கலைஞரும் இயேசு சபை அருள்பணியாளருமான Rupnik குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருத்தத்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையில், எனக்கு இது ஒரு ஆச்சரியம் என்றும், இந்த அளவிலான ஒரு கலைஞர், இப்படி நடந்து கொண்டதாகக் கூறப்படுவது, எனக்குப் பெரியதொரு ஆச்சரியத்தையும் காயத்தையும் ஏற்பத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சீனாவுடன் உறவு

சீனாவுடனான உறவுநிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, சாத்தியமான சூழ்நிலைகளுக்காக நாம் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 January 2023, 14:23