பங்குத்தளம் மக்களை மையமாகக் கொண்ட சமூகம் – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
பங்குத்தளங்களின் வாசலில் "அனுமதி இலவசம்" என்று ஒரு பலகையை வைக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும், பங்குத்தளங்கள், அதிகாரத்துவம் இல்லாமல், மக்களை மையமாகக் கொண்ட நெருக்கமான சமூகங்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பங்குத்தளங்கள் எல்லாரையும் வரவேற்கும் இடமாக மாற செபிப்போம் என்ற மையக்கருத்தில் சனவரி 30 திங்கள் கிழமை வெளியிட்ட பிப்ரவரி மாத செபக்கருத்து காணொளிக் காட்சியில் இவ்வாறு குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அருளடையாளங்கள் என்னும் பரிசைப் பெறும் இடமாகவும், தொண்டு மற்றும் தாராளமனப்பான்மையின் பள்ளிகளாகவும் பங்குத்தளங்கள் மாற வேண்டும் என்றும், சமுதாயத்தால் புறந்தள்ளப்பட்டவர்களுக்கு எப்போதும் திறந்த கதவுகளை உடையதாக இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
பங்குத்தளம் கேளிக்கைக் கூடமல்ல என்றும், நமது பங்குத்தளங்களின் மாதிரியை மறுபரிசீலனை செய்து பார்த்து வாழவேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலத்திருஅவையில், மக்களில், ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும், நம்பிக்கை, உடன் பிறந்த உறவு மற்றும் தேவையில் இருப்பவர்களை வரவேற்கும் சமூகங்களாகவும் பங்குத்தளங்கள் மாற செபிப்போம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்