தேடுதல்

 புத்தமதத் துறவிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை புத்தமதத் துறவிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்போம் : திருத்தந்தை

தங்கள் பங்கிற்கு, கிறிஸ்தவர்களும் தங்களுக்குரிய சுற்றுச்சூழல் பொறுப்பை நிறைவேற்றும்போது, நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதி இறைத்தந்தை அவர்களிடம் ஒப்படைத்த இந்தப் படைப்பைப் பாதுகாக்கிறார்கள் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனிதக் குடும்பம் மற்றும் இயற்கையின் அடிப்படையில் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் பொறுத்தளவில், ஒருங்கிணைந்த தீர்வுகளைத் தேடுவதற்கு, அனைத்து நிலைகளிலும் உரையாடல் வழி அவசியத் தேவையாகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 19, இப்புதனன்று, கம்போடியாவிலிருந்து வந்த புத்தமதத் துறவிகளின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இயற்கை என்னும் இப்பொதுவான இல்லதைப் பாதுகாக்கவும், மக்களை அமைதியில் வாழச் செய்யவும், பல்சமயத் தலைவர்களின் ஒத்துழைப்பையும் உறவையும் வலுப்படுத்துவோம் என்றும் விண்ணப்பித்தார்.

நமது மனித குடும்பம் மற்றும் நமது பூமிக்கோள் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், அவர்களின் கலந்துரையாடலுக்குப் பொருத்தமான  கருப்பொருளாக "சுற்றுச்சூழல் மாற்றம்" (Ecological Conversion) என்ற கருப்பொருளைத் தேர்வுசெய்துள்ளது தனக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பெருமையடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மைய ஆண்டுகளில் சமூக-அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து குணப்படுத்துதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புத் தேவைப்படும் வேளை, இத்தகைய உங்களின் முயற்சி நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் நலன் மற்றும் உங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிக மரபுகளால் ஈர்க்கப்பட்டு, உங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் வழங்கக்கூடிய முக்கிய பங்களிப்புகளுக்கான அக்கறையின் நேர்மறையான அறிகுறியாக அமைந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வறுமை மற்றும் விளிம்புநிலை மக்களின் மாண்பை மதிக்காதது, நம் காலத்தில் மிகுந்த துயரத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது என்றும், இதற்கு எதிரான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் இந்த அநீதிக்கு எதிராக நாம் ஒன்றிணைந்துப் போராடவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த காரணத்திற்காக, எனது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட வழிகளைப் பின்பற்றி, நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியை பாதுகாக்க வேண்டுமென நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றும் எடுத்துக்காட்டினார்.

சூழலியல் பொறுப்பை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தக்கவைப்பதில் அந்தந்த மத மரபுகள் ஆழமான உரையாடலுக்கான வழிகளை வழங்குகின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் பங்கிற்கு, கிறிஸ்தவர்களும் தங்களுக்குரிய சுற்றுச்சூழல் பொறுப்பை நிறைவேற்றும்போது, ​​நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதி இறைத்தந்தை அவர்களிடம் ஒப்படைத்த இந்தப் படைப்பை பாதுகாக்கிறார்கள் என்றும் விவிரித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 January 2023, 13:50