தென்சூடான் மக்களுக்காக செபியுங்கள் - பேராயர் Welby
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து தென் சூடானுக்குத் தான் மேற்கொள்ள இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப்பயணத்திற்கு முன்னதாக, தற்போதைய மோதல்கள் மற்றும் வறுமையைத் தாங்கும் தென்சூடான் மக்களுக்காக சிறப்பாக செபிக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார் பேராயர் Justin Welby
சனவரி 31, செவ்வாய்க்கிழமை திருத்தந்தை அவர்கள் 40 வது திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் இப்பயணத்திற்கு நன்றியை தெரிவித்தும், தென்சூடான் மக்களுக்காக செபிக்க வலியுறுத்தியும், சனவரி 29 ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby.
2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இத்திருத்தூதுப் பயணமானது இம்முறை, ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் Dr Greenshields, Canterbury ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby, ஆகியோருடன் திருத்தந்தை இணைந்து தென் சூடானில் நிறைவேற்றப்பட உள்ளது.
சனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை காங்கோ குடியரசு நாட்டு மக்களைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 3ஆம் தேதி தென்சூடானின் ஜீபாவிற்கு செல்ல இருக்கும் நிலையில், மோதலால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க மக்களுக்காக செபிக்க வலியுறுத்தியுள்ளார் பேராயர் Welby,
மோதல்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் வறுமையால் தொடர்ந்து துன்புறும், தென்சூடான் மக்களின் அழுகையை உலகத்திற்கு எடுத்துரைக்கும் ஊழியர்களாக தாங்கள் இப்பயணத்தை மேற்கொள்வதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக 2022 ஜூலை முதல், தெற்கு சூடானின் பல பகுதிகளில் வன்முறை தீவிரமடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Welby.
ஓர் சமய அமைதிப்பயணம்
“பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, திருவையின் மூன்று வெவ்வேறு பகுதிகளின் தலைவர்கள் ஒன்றிணைவதன் வழியாக ஒன்றிப்புப் பற்றிய இயேசுவின் செபத்திற்கு பதிலளிக்க முயல்பவர்களாகவும், அவரை ஒன்றிணைந்துப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Welby,
"அமைதியின் இளவரசராம் இயேசுவைப் பின்பற்றுபவர்களாக நாங்கள் வருகிறோம், அவருடைய தூயஆவி தென்சூடானில் செயல்படுகிறது என்பதையும், இதயங்களை மாற்றும் சக்தி அதற்கு உள்ளது என்பதையும் அறிந்திருக்கிறோம்", என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Welby,
பேராயர் Welbyயுடன் தென்சூடானிற்கு அவரது மனைவி திருமதி கரோலினும் செல்கின்றார், இவர் தலத்திருஅவையில் உள்ள பெண்கள் அமைதியைக் கட்டியெழுப்புபவர்கள் என்பதை வலியுறுத்தியும், குறிப்பாக தென்சூடானின் ஆங்கிலிக்கன் ஆயர்கள் மற்றும் பேராயர்களின் மனைவிகளை ஆதரிப்பதற்காகவும் பலமுறை பயணம் செய்துள்ளார்.
தென்சூடானின் பெண்கள் "நம்பமுடியாத வலிமைமிக்க பெண்கள்" என்று கூறியுள்ள திருமதி கரோலின் Welby, அவர்களில் பலர் இடம்பெயர்வு, பாலியல் வன்முறை, சொந்த சமூகங்களில் தவறாக நடத்தப்படும் சூழல் போன்றவற்றால் அன்றாடம் பயம் நிறைந்தவர்களாக வாழ்வதாகவும் அப்பயணங்களின் போது தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்