தேடுதல்

அவாலியில் முஸ்லிம் மூத்தோர் அவையினர் சந்திப்பு

காழ்ப்புணர்வு, வன்முறை, மற்றும், இணக்கமின்மை ஆகியவை எப்போதெல்லாம் போதிக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் கடவுளின் புனிதத்தை மீறுவதாக இருக்கும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 04, இவ்வியாழன் மாலையில் அவாலியின் சாஹிர் அரச மாளிகையிலுள்ள மசூதியில் முஸ்லிம் மூத்தோர் அவையின் உறுப்பினர்களைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் முதலில் திருக்குரானிலிருந்து ஒரு சிறிய பகுதியும் (திருக்குரான் 36:33-36), திருவிவிலியத்தின் தொடக்க நூலிலிருந்து கடவுள் ஏதேனில் தோட்டம் அமைத்து, அதன் நடுவில் வாழ்வின் மரத்தை நட்டுவைத்தது, காயின் தன் சகோதரர் ஆபேலைக் கொன்றது பற்றிய பகுதியும் (2:8-9.15-17;3:9-10;4:6-10) வாசிக்கப்பட்டன. திருக்குரான் பகுதியை ஒரு சிறுவன் பாடினான். திருவிவிலியப் பகுதியை ஆங்கிலத்தில் இந்தியச் சிறுமி ஒருவர் வாசித்தார். பின்னர் இஸ்லாமிய மூத்தோர் அவையின் பொதுச் செயலரும், வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவிலிருந்து ஒருவரும், மூத்தோர் அவையின் பிரதிநிதி ஒருவரும் தொடக்கவுரைகளை ஆற்றினர். அதற்குப்பின்னர் பெரிய குரு அல் தாயிப் அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து திருத்தந்தையும் உரையாற்றினார்.

இஸ்லாமிய சமுதாயத்தில் அமைதியை ஊக்குவிப்பதற்கென்று, 2014ஆம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அபு தாபியில் இந்த முஸ்லிம் மூத்தோர் அவை உருவாக்கப்பட்டது. இந்த அவையின் பிரதிநிதிகளைச் சந்தித்த நிகழ்வுக்குப்பின்னர், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்ற அரேபியாவின் நமதன்னை பேராலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்பேராலயத்தில் அமைதிக்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு ஒன்றை தலைமையேற்று நடத்துவது, இவ்வெள்ளியன்று இத்திருத்தூதுப் பயணத்தில் கடைசியாக நடைபெறும் நிகழ்வாகும்.

டுவிட்டர் செய்தி

காழ்ப்புணர்வு, வன்முறை, மற்றும், இணக்கமின்மை ஆகியவை எப்போதெல்லாம் போதிக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் கடவுளின் புனிதத்தை மீறுவதாக இருக்கும். கடவுள் பெயரால் போரில் ஈடுபடுவது மற்றும், வன்முறையைப் பயன்படுத்துவதை, மத உணர்வுள்ள ஒருவர் உறுதியுடன் புறக்கணிக்கின்றார் என பஹ்ரைன் முடியாட்சி நாட்டின் அறிக்கை போதிக்கின்றது என்ற சொற்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 04, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

அவாலியில் முஸ்லிம் மூத்தோர் அவையினர் சந்திப்பு
அவாலியில் முஸ்லிம் மூத்தோர் அவையினர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹ்ரைன் நாட்டில் மேற்கொண்டு வரும் 39வது திருத்தூதுப் பயணத்தோடு அவர் இதுவரை 58 நாடுகளில் இப்பயணங்களை மேற்கொண்டுள்ளார். உலகில் மதங்களிடையே, மக்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும், அதற்கு, ஆயுதங்களின் சப்தங்கள் அடங்கி உலகில் அமைதி ஏற்படவேண்டும், இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமைகின்ற மனிதரிடையே உடன்பிறந்த உணர்வுநிலை வளரவேண்டும். உரையாடல் இடம்பெறவேண்டும், இவற்றை ஊக்குவிப்பதற்கு மதங்களின் தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது போன்றவற்றை வலியுறுத்தும் நோக்கத்தில், 85 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முழங்கால் மூட்டுவலியையும் பொருட்படுத்தாமல், சில நாடுகளில் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். திருத்தந்தையின் இந்நோக்கம் நிறைவேற எல்லாம்வல்ல இறைவனை மன்றாடுவோம். பஹ்ரைன் வளைகுடா நாட்டில் தனது நான்கு நாள்கள் கொண்ட இத்திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, நவம்பர் 06, வருகிற ஞாயிறு இத்தாலி நேரம் மாலை 4.35 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமானத்தளம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2022, 15:45