தேடுதல்

சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் அமைதிக்கான படம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் அமைதிக்கான படம்  

அமைதிக்கான இறைவேண்டலில் பல்மதத் தலைவர்களுடன் திருத்தந்தை

1986ம் ஆண்டு முதல், அமைதிக்கான ஆண்டு இறைவேண்டல் கூட்டம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவந்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அமைதிக்கான மூன்று நாள் கருத்தரங்கின் இறுதி நாளான அக்டோபர் 25, செவ்வாயன்று மாலை இறுதி நிகழ்வில் பல்வேறு மதத்தலைவர்களுடன் கலந்து கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1986ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால், அமைதிக்கான பல்வேறு மதப்பிரதிநிதிகளுடன் இணைந்த இறைவேண்டல் கூட்டமாக துவக்கப்பட்டு, தற்போது அதன் 36வது கூட்டம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பால் கொலோசெயத்தில் நடத்தப்படுகிறது.

உரோம் நகரின் EUR பகுதிலுள்ள  “Nuvola” என்னும் கருத்தரங்கு மையத்தில் ‘அமைதிக்கான அழுகுரல்’ என்ற தலைப்பில் அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமையன்று இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா, பிரான்ஸ் அரசுத்தலைவர் எம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு மதத்தலைவர்களால் துவக்கப்பட்ட இக்கருத்தரங்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்புடன் செவ்வாய் மாலை கொலோசெயம் அரங்கில் நிறைவுக்கு வருகிறது.

1986ம் ஆண்டு முதல் அமைதிக்கான ஆண்டு இறைவேண்டல் கூட்டம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவந்த நிலையில், அண்மை ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று காரணமாக உரோம் நகரிலேயே இடம்பெற்றுவருவதும், மூன்றாண்டுகளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அதில் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் போர், குறிப்பாக உக்ரைன் போர் இடம்பெறும் இன்றைய சூழல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ‘அமைதிக்கான அழுகுரல்’ எனும் இறைவேண்டல் நிகழ்வில், பல திருப்பீட அதிகாரிகளுடன், கிறிஸ்தவ, யூத, இஸ்லாம், புத்த, சீக்கிய, மற்றும் இந்து மதப்பிரதிநிதிகள் பங்குகொள்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2022, 13:48